யாழ். குப்பிழான் தெற்குப் பகுதியில் பட்டப் பகலில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

யாழ். குப்பிழான் தெற்குப் பகுதியில் பட்டப் பகலில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குப்பிழான் தெற்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை(20) பிற்பகல் வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்ற சமயம் பார்த்து வீட்டின் ஓடு பிரித்து சீற் உடைத்து உள்ளே இறங்கிய கொள்ளையன் ஒருவன் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளான்.

இந்நிலையில் குறித்த கொள்ளையன் வீட்டின் மேலால் உள்ளே இறங்குவதை குறித்த வீட்டிற்கு அருகிலுள்ள வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தரொருவர் கண்டு குறித்த வீட்டிற்கு அயலில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் குறித்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இதற்கிடையில் சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஏராளமானோர் மேற்படி பகுதியில் திரண்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்களும் தகவலறிந்து அங்கு வந்த நிலையில் அனைவரும் இணைந்து கொள்ளையனைப் பிடிப்பதற்கு முயன்றுள்ளனர்.

எனினும், கொள்ளையன் வீட்டின் பின் கதவைத் திறந்து தப்பியோட முயன்றுள்ளான். இந்நிலையில் அப்பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் இணைந்து குறித்த கொள்ளையனை விரட்டிச் சென்றுள்ளனர். சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய வளாகத்துக்குள் குறித்த கொள்ளையன் உட்புகுந்த நிலையில் விரட்டிச் சென்ற இளைஞர்கள் குறித்த கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் கட்டி வைக்கப்பட்டுச் சுன்னாகம் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டான். குறித்த கொள்ளையனிடமிருந்து மேற்படி வீட்டில் திருடப்பட்ட கைத்தொலைபேசியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த சுமார் 25 வயதான இளைஞன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த கொள்ளையன் மடக்கிப் பிடிக்கப்பட்டமையால் பெரும் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.