மாவீரர்களை கொச்சைப்படுத்திவிட்டு மேடைகளில் களப் போராளிகள் போன்று கூட்டமைப்பினர் வீரவசனம்- சந்திரகுமார்

மாவீரர்களை கொச்சைப்படுத்திவிட்டு தேர்தல் காலங்களில் தாங்களும் களப் போராளிகள் போன்று மேடைகளில் கூட்டமைப்பினர் வீரவசனம் பேசுகின்றனர் என சமத்துவக் கட்சியின் தலைவரும் சுயேட்ச்சை குழு ஐந்தினுடைய முதன்மை வேட்பாளருமான சந்திரகுமார் முருகேசு தெரிவித்தார்.

சுயேட்சைக் குழு ஐந்தினுடைய தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று  தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

மாற்றத்திற்கான தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். இந்த தேர்தலில் மாற்றம் ஒன்று ஏற்படாது போனால் கடந்த பத்து வருடங்களாக நாம் அனுபவித்த துன்பங்கள் மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்கும். அதனை நாம் தாக்குப்பிடிப்போமா என்பதே சந்தேகமாக உள்ளது.

இறுதி யுத்தத்தில் பலவற்றை இழந்து மக்கள் வழமையான வாழ்விற்கு திரும்பிய போது 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பினர் 16 நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றின. அந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களதும் வினைத்திறன் அற்ற தலைமைத்துவத்தினால் மக்களுக்கு மிஞ்சியது வறுமையும் வேதனையுமே ஆகும்.

யாழ்பாண நகர்ப்புறங்களில் உள்ள கட்டிடங்களை பார்த்துவிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் செல்வந்தர்கள் என நினைப்பார்கள். ஆனால் யாழில் 33000 குடும்பங்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். கோவில் காணிகளிலும் குத்தகை நிலங்களிலும் வசிக்கிறார்கள். யாழ் மாவட்டத்தை விட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மேலானது என்றே கூறலாம் அந்தளவிற்கு இங்கு உட்கட்டுமான வசதிகளை உயர்த்த வேண்டிய தேவை உண்டு. இங்கு சாதியக் கட்டமைப்புக்களை ஊக்குவித்து வளர்க்கின்ற நபர்கள் உள்ளனர். உண்மையில் இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும்.

மக்களின் எதிர்காலத்தை நீண்ட நோக்கோடு திட்டமிட்டு செயற்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். எங்களுடைய எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாக எமது விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளோம். இம்முறை மாற்றத்தினை விரும்பும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

Comments are closed.