கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? – விக்னேஸ்வரனை ஆதரிப்போரை சாடுகின்றார் சரவணபவன்
“ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்? அல்லது கோட்டாபயவை நேரடியாக எதிர்த்து, அவரைத் தோற்கடிக்க தமிழ் மக்களை அணி திரட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்?”
– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் வேட்பாளருமான ஈ.சரவணபவன்.
மூளாயில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றது. கோட்டாபய ராஜபக்சவும் அவரை எதிர்த்து சஜித் பிரேமதாஸவும் களமிறங்கியிருந்தனர். இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியில் வாக்களித்து சுமார் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வடக்கில் கோட்டாபயவை தோற்கடித்தனர்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு 10 ஆண்டுகள் காத்திருந்து ஜனநாயகப் பதிலடியை, நெத்தியடியாகக் கொடுத்தனர்.
கோட்டாபயவை எதிர்க்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத்துணிவாக எடுத்தது. அதை நடைமுறைப்படுத்த முழு வீச்சில் முயற்சி செய்தது.
ஆனால், சி.வி.விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜனாதிபதித் தேர்தலின் போது என்ன செய்தார்கள்? மக்களே 8 மாதங்களுக்கு முன்னர் நடந்ததை மறந்து விட்டீர்களா? இவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களை வழிகாட்டுவதற்குப் பதிலாக, கோட்டா வை நேருக்கு நேர் எதிர்ப்பதற்கு துணிவில்லாமல் ஓடி ஒளிந்ததை மறந்து விட்டீர்களா?
தேர்தலில் ஒருவரை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் வழமை. இல்லை தேர்தலைப் புறக்கணிக்கலாம். தேர்தல் புறக்கணிப்புக்கூட ஒரு தரப்புக்கு மறைமுக ஆதரவை வழங்கும் நிலைமை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காணப்பட்டது. இதைத் தெரிந்து கொண்டும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்தது. தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பது தமக்குத் தாமே மண் அள்ளி தலையில் கொட்டிக்கொள்வதற்குச் சமனானது.
மறுபுறம் விக்னேஸ்வரனோ, மக்கள் விரும்பியவாறு வாக்களிக்கலாம் என்று ஓடும் நீரில் நழுவும் மீன் போல், கோட்டாவை எதிர்ப்பதிலிருந்து நழுவிக் கொண்டார். ஒரு தலைவன் என்பவன், மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது கூட மஹிந்த ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 76 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு 23 ஆயிரம் வாக்குகளே கிடைத்தன. அந்தளவு தூரம் தமிழ் மக்கள் கோட்டாபயவை நிராகரிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்கள். தமிழ் மக்களின் மனநிலையை அறியாது, அவர்களைப் பாழ் கிணற்றிலே தள்ளிவிட நினைத்த விக்னேஸ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமுமா உங்கள் தெரிவு?
ராஜபக்சக்களின் ஆட்சி தென்னிலங்கையில் வருமாக இருந்தால் அவர்களை எதிர்க்கத் திராணியுள்ள ஒரேயொரு சக்தி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான். கோட்டாவை எதிர்க்க முடியாது புறமுதுகு காட்டி ஓடிய விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ உங்கள் தெரிவாக இருந்தால், ராஜபக்சாக்கள் தமிழர்களின் முதுகில் ஏறிச் சவாரிதான் செல்வார்கள்.
தென்னிலங்கையில் விஸ்பரூபம் எடுத்து வரும் பௌத்த, சிங்களப் பேரினவாதத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்து, தமிழரைப் பாதுகாக்க கூட்டமைப்பால் மாத்திரமே முடியும்.
எங்கள் வீரமிகு போராளிகளையும், மக்களையும் பல்லாயிரக்கணக்கில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்த கோட்டாபயவை எதிர்க்கத் துணிவின்றி ஓடி ஒளித்துக்கொண்ட கோழைகளின் கூட்டத்திடம், நீங்கள் கேட்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவை எதிர்க்கப் பயந்த நீங்கள், தமிழருக்காக நாளை துணிந்து குரல் கொடுப்பீர்கள் என்று எப்படி நம்புவது?
ராஜபக் ஷக்களின் கொட்டத்தை அடக்குவதற்கு, கோட்டாவை மறுபடியும் தோற்கடிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை தாருங்கள்” – என்றுள்ளது.
Comments are closed.