புதிய நாடாளுமன்ற அமர்வில் தகவல்களை உடனுக்குடன் வழங்குவதற்கு நடவடிக்கை

 

“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் புதிய நாடாளுமன்றத்தின் சகல தகவல்களையும் நாடாளுமன்ற அமர்வு தினத்தன்றே பொதுமக்களுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பொன்று உருவாக்கப்படும்.”

– இவ்வாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட ‘நாடாளுமன்ற வித்தி’ செய்தி மடல் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றக் குழுக்களின் செயற்பாடுகளை உடனடியாகவே பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் தொடர்பில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

அத்துடன் நடமாடும் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், நடைமுறைகள் பற்றிய விபரங்கள் பலவற்றைத் தாங்கியதாக நாடாளுமன்றத்தின் முதலாவது செய்தி மடலாக  ‘நாடாளுமன்ற வித்தி’ வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த ஐந்து வருடங்களில் சிறந்த நிறுவனங்களுக்கான இணையத்தளத்துக்கான விருதுகளைப் பெற்றிருக்கின்றது. இதனை மேலும் மெருகூட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – என்றார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல உள்ளிட்ட நாடாளுமன்றத் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Comments are closed.