நாடாளுமன்ற சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் 31 ஆம் திகதி கையளிப்பு
“பொதுத்தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் கொரோனா வைரஸ் சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு எதிர்வரும் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்குக் கையளிக்கப்படும்.”
– இவ்வாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஸ்மன் கம்லத் தொரிவித்தார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இந்த வழிகாட்டல் தொகுப்பு கையளிக்கப்படவுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், நாடாளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொரோனா வைரஸ் தொற்று சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிப்பது குறித்து ஆராயும் நோக்கில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஸ்மன் கம்லத் தலைமையிலான சுகாதார அமைச்சின் குழுவினர் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின்போது அவர்கள் நாடாளுமன்றத்தின் பல்வேறு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஏற்கனவே நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் திருப்தியை வெளியிட்டிருந்தனர்.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தயாரிக்கும்போது நாடாளுமன்ற சபா மண்டபம், உணவுக் கூடம் மற்றும் நாடாளுமன்ற நூல் நிலையம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது எனச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் வேண்டுகோளுக்கிணங் கசுகாதார அமைச்சின் ஊடாக இந்த வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.