வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு முஸ்லிம் ஆதரவாளர் வட்டம் சூறாவளிப் பிரச்சாரம்
எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் ஓழுங்கமைப்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் இன்று (29) தேர்தல் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் வன்னித் தேர்தல் தொகுதிக்குள் உள்ளடங்குகின்ற வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் நகரப்புறங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் வட்டத்தினால் முஸ்லிம் மக்களின் வன்னித் தேர்தல் தொகுதிக்கான விருப்புத் தெரிவாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் வடக்குமாகாண சபை சுகாதார அமைச்சருமான வைத்தியக் கலாநிதி கௌரவ ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
வவுனியா நகர்ப்புற பிரச்சார நடவடிக்கைகளின் பின்னர் வன்னித் தேர்தல் தொகுதிக்கான முஸ்லிம்களின் விருப்புத் தெரிவாக தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருவரான வைத்தியக் கலாநிதி கௌரவ ப. சத்தியலிங்கம் அவர்களுக்கும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களினால் வன்னித் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களின் வைத்தியக் கலாநிதி கௌரவ ப. சத்தியலிங்கம் அவர்களுக்கான ஆதரவை உத்தியோக பூர்வமாக தெரிவித்ததுடன், முஸ்லிம் மக்களின் ஆதரவு தெரிவிக்கும் துண்டுப் பிரசுரமும் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் கள நிலவரம் மற்றும் வன்னித் தொகுதி முஸ்லிம் மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய பிரசார நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.எம். அப்துல்லாஹ், செயலாளர் ஏ.சி.எம். மஹானாஸ், உப தலைவர் ஐ.எல். நிராஸ், உப செயலாளர் எம்.எல். லாபிர் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை குறித்த அமைப்பினர் அண்மையில் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.
தகவல்
என்.எம். அப்துல்லாஹ்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் ஆதரவாளர் வட்டம்.
Comments are closed.