கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் தூவாரகேஸ்வரன் கோரிக்கை

எதிர்வரும் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் என யாழ் பிரபல வர்த்தகர் தியாகராஜா துவாரகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக மன்றத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கமானது எதிர்வரும் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகின்றது. எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களாகிய நாங்கள் தெரிவு செய்யும் உறுப்பினர்களை தகுதியானவர்களாக தெரிவு செய்ய வேண்டும் அதிலும் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களில் புதிய முகங்களை தெரிவு செய்வதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்.
அண்மையில் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் வெளிப்படையாகவே கூறியிருந்தார் அரசாங்கத்தை அமைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காதவிடத்து அதற்கு ஆதரவு வழங்குவோம் என. எனவே அவர்கள் உண்மையை கூறியே தேர்தலில் களமிறங்கியுள்ளார்கள் நீங்கள் தரகர்களுக்கு வாக்களிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தான் சிறந்தது என நான் கருதுகின்றேன்.
இங்கே சிலர் தென்னிலங்கையை சார்ந்த கட்சிகளில் வேட்பாளர்களாக சில மாபியா குழுக்கள் களமிறங்கியுள்ளார்கள். அவர்கள் எந்த முகத்தோடு தேர்தலில் களமிறங்கியுள்ளார்கள் என எனக்கு தெரியவில்லை. அவர்கள் கூறுகிறார்கள் பல உண்மைகளை பாராளுமன்றத்தில் சொல்லுவோம் என்று இவர்கள் சொல்வதற்கு என்ன உண்மை இங்கே இருக்கின்றது முதலில் மக்கள் இவ்வாறானவர்கள் பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது கடந்தகால வரலாற்றைப் பரிசீலிக்க வேண்டும்.
கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்து தென்னிலங்கை அரசியல் கட்சிக்கு காசை கொடுத்து தமது அரசியல் இருப்பினை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை.
அதிலும் விண்ணன் என்பவரும் இம்முறை தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு விண்ணன் என்ற பெயர் ஏன் வந்தது என்றால் அவர் மக்களை ஏமாற்றியவர் என்பதால்தான் அவருக்கு விண்ணன் என்ற பெயர் வந்தது. அதாவது ஏமாற்றுவதில் விண்ணன் என்பதால்தான் அவரை விண்ணன் என அழைக்கின்றார்கள்.
என்னுடைய சகோதரர் மகேஸ்வரன் சுட்டுப்படுகொலை செய்வதற்கு திட்டம் தீட்டி பிரதான சூத்திரதாரியாக இருந்தவர். தேர்தல் முடிவுற்றதும் பல உண்மைகளை கூறப்போவதாக சொல்கிறார். உண்மையில் தேர்தல் முடிந்ததும் இவரிடம் இருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரே பல உண்மைகளைப் பெறப்போகின்றனர்.
எனவே மக்கள் சிந்தித்து தரகர்களுக்கு வாக்களிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் புதிய முகங்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் – தெரிவித்தார்.
Comments are closed.