இழந்த கல்வியை மீளவும் கட்டியெழுப்பினால் தென்னிலங்கையை ஆளமுடியும் – கணேஸ்வரன்
இழந்த கல்வியை மீளவும் கட்டியெழுப்பினால் தென்னிலங்கையை ஆளமுடியும் என யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய செவ்வி வருமாறு:
நீங்கள் ஆரம்பத்தில் அரசியலில் பிரவேசிப்பதற்கான பின்னணி என்ன?
1986 களில் என்னுடைய 16 வயதினிலே ரெலோ இயக்கத்தில் அரசியல்துறையில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டேன். காலப்போக்கில் இவ்வியக்கத்தில் உள் முரண்பாடுகள் ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. இந்த இயக்கங்கள் சரிவராது என்ற அடிப்படையில் நான் இயக்கத்தை விட்டு விலகி லண்டன் சென்றேன்.
அதன்பின் நாடு திரும்பினாலும் ரெலோ இயக்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. கடந்த பழைய கால நினைவுகள் சேர்ந்து செயற்படுவதற்கு விடவில்லை. எனினும் மூத்த ரெலோ உறுப்பினர் அந்த இயக்கத்துடன் திரும்பவும் வந்து இணையுமாறு வேண்டிக்கொண்டார். மனதை ஆற்றுப்படுத்திகொண்டு திரும்பவும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். எனக்கு முக்கிய பதவிகள் தந்தார்கள். ஆனாலும் இங்கும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய எவையும் இருக்கவில்லை. வெறுமனே எதிர்ப்பு அரசியலும் தமிழ்தேசிய அரசியலும் தான் இருந்தது தவிர மக்களுடைய வறுமை கல்வி வாழ்வாதாரம் விவசாயம் மீன்பிடி முதலிய விடயங்களைப்பற்றிய வேலைத்திட்டங்களோ அதற்கான முன்னேற்றகரமான கூட்டங்களோ எவையும் நடக்கவில்லை. அதில் நான் மட்டும்தான் வித்தியாசமான சிந்தனையுடன் இருந்தேன். அதனால் மீண்டும் அதற்குள் இருக்கமுடியாது என்ற நிலையில் வெளியேறினேன்.
நீங்கள் அதற்கு பின்னர் எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டீர்கள்?
நான் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்த சமூகப்பணிகளை செய்துகொண்டிருந்தேன். என்னுடைய சிவன் அறக்கட்டளையின் மூலமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். அதேவேளையில் என்னுடைய ஆதரவாளர்கள் ஒரு புதிய கட்சியொன்றை ஆரம்பித்து செயற்படுமாறு என்னை வலியுறுத்தினார்கள். அந்த வகையில் புத்திஜீவிகள் குழுவினருடன் இணைந்து புதிய கட்சிக்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்தோம். அதற்கான பதிவு முயற்சிகளிலும் ஈடுபட்டோம். இறுதி வரையிலும் அது கைகூடவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் வந்தது. இன்று நாட்டைப் பொறுத்தவரையிலும் சிறுபான்மை சமூகம் விரும்பக்கூடிய நல்ல தலைவர் சஜித் பிரேமதாசவே. அனைத்து சிறுபான்மை சமூகக்கட்சிகளும் அவருடனே கைகோர்த்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எல்லோரும் அவருக்கு ஆதரவு வழங்கினோம். நிச்சயமாக இந்த பொதுத்தேர்தலிலும் அவருக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எவ்வாறாயினும் நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணம் என்ன?
மக்களுக்கு சேவை செய்யக்கூடிய உருப்படியானதொரு எந்த தமிழ்கட்சிகளையும் காணமுடியவில்லை. அதேபோன்று அந்தக்கட்சிகளிடம் கல்வி மக்களுடைய வறுமை வாழ்வாதாரம் பற்றிய அக்கறை இருப்பதாக தெரியவில்லை. இதுவரையிலும் எந்தவிதமான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. வெறுமனே தமிழ் மக்களுக்கான தீர்வு சர்வதேசத்தை நாடுவோம் ஐக்கியநாடுகள் சபைக்கு சென்று முறையிடுவோம் எங்கள் பின்னால் இந்தியா இருக்கின்றது போன்ற வெற்றுக்கோசங்களை மட்டும் தான் சொல்கிறார்களே தவிர அவர்கள் எதையும் செய்யவில்லை.
நாங்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் சேர்ந்து தான் எங்களைத்தாக்கியது. அதே சர்வதேச நாடுகளிடம் போய் முறையிடுவோமாயின் வெறும் ஏமாற்றம் தான் நடக்கும். இதைவிட வடமாகாணத்தில் பசிபட்டினி வறுமையை போக்கி கல்வியில் போசாக்கு நிலையை ஏற்படுத்தி எமது மாகாணத்தை ஒரு முன்மாதிரிமிக்க மாகாணமாக மாற்றியமைப்போமாயின் எமது ஏனைய மாகாணங்கள் எங்களை திரும்பிப்பார்க்கும் நிலை ஏற்படும். நாங்கள் இழந்த கல்வியை மீளவும் கட்டியெழுப்பி மீண்டும் தென்னிலங்கையை ஆளமுடியும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாகும். அவர்களும் எம்மை ஏற்றுக்கொள்வார்கள்.
உங்களுடைய எதிர்காலத்திட்டங்கள் எவை?
கடந்த காலங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் கல்வியை மேம்படுத்தல் பசிபட்டினி வறுமையில் இருந்து போசாக்கு மிக்க சமூகத்தினை கட்டியெழுப்புதல் விளையாட்டு மீன்பிடி விவசாயம் கைத்தொழில் சுகாதாரம் அரசியல் கைதிகள் விவகாரம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் என்ற பரந்த மட்டத்திலான அபிவிருத்தி நான் செய்து வந்துள்ளேன். அதிகாரம் பலம் கிடைக்குமாயின் இதை பன்மடங்கு என்னால் செய்துகாட்ட முடியும்.
சமூகத்தொண்டுதான் உண்மையான அரசியலாகும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ள சமூகத்தொண்டர்கள் அரசியலுக்குள் வருவது மிகஅரிது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம். நாங்கள் பெறும் அரச சலுகைகள் அனைத்தையும் மக்களுக்காக பகிர்ந்தளிக்க இருக்கின்றேன். குறிப்பாக நான் பெறும் சம்பளம் வாகனப்பெமிட் உள்ளிட்ட என்னென்ன சலுகைகள் வரப்பிரசாதங்கள் இருக்கின்றதோ அது அனைத்தையும் மக்களின் நலன்களுக்காக பகிர்ந்தளிப்பேன் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
Comments are closed.