புதிய யுகத்தின் விடிவுக்காக இலங்கையருக்கு ஓர் பகிரங்க கடிதம்
ஒரு புதிய யுகத்தின் விடிவுக்காக புலத்தில் ஏங்கும் ஒரு இலங்கை மகன் இலங்கையில் வாழும் ஏனைய இலங்கையருக்கு எழுதும் பகிரங்க கடிதம் …..
இலங்கை முழுவதும் பரந்து பட்டும் அதேவேளை உள ரீதியாக பிளவு பட்டும் வாழும் இலங்கை மக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்
முன்னொரு காலத்தில் இந்து சமுத்திரத்தின் நித்திலம் என்றும் தென்னாசியாவின் நெற்களஞ்சியம் என்றும் வர்ணிக்கப்பட இலங்கை இன்று இந்து சமுத்திரத்தின் தரித்திரம் என்றும் தென்னாசியாவின் துயரம் என்றும் கருதப்படுவதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா?
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகளாகியும் ஒரு துளி கூட முன்னேறாமல் பின்னோக்கி போய்க் கொண்டு இருக்கிறோமே யாராவது கவலைப்படுகிறோமா? ஒரு ஜனநாயக கட்டமைப்பில் இந்தப் பின்னடைவுக்கு நாங்கள் தானே பொறுப்பு ஏற்கவேண்டும். அப்போ எங்கே தவறிழைத்தோம் . ஒவ்வொரு தேர்தலிலும் தவறான எமது தெரிவு தானே இதற்கு காரணமாக இருக்க முடியும் ?அந்த தவறை 2020 பொது தேர்தலிலும் இழைக்க போகிறோமா? முடிவு செய்யும் தருணம் இது.
முதலில் வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம். 1948 இல் சுதந்திரம் கிடைத்த தருணத்தில் இலங்கையின் அரசசேவையின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் தமிழர்கள் .காரணம் பிரித்தானியர் காலத்தில் பல தமிழர்கள் கல்வியில் சிங்களவர்களை சிறந்து இருந்ததுதான் . இதற்கு ஒரு முக்கிய காரணம் பிரித்தானியர் கொண்டு வந்த மதமாற்றத்தையோ ஆங்கில கல்வியையோ ஏற்கவில்லை.
இதைவிட சிறுபான்மையிடம் நிர்வாக தலைமை இருப்பது தமது காலனித்துவ மேலாதிக்கத்துக்கு உகந்தது என்று பிரித்தானிய சாம்ராஜ்யம் நினைத்ததும் தமிழர் உயர் பதவிகளை பெற காரணமாயிருந்தது . எனவே அரசியல் தலைமையில் சிங்களவர்கள் இருந்தாலும் அரசு நிர்வாக கடடமைப்பின் பல உயர் பதவிகளில் தமிழர்களே இருந்தார்கள் . இது சிங்கள மக்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்து வந்தது.
இப்படி இருந்த நிலையில் தனக்கு உரிய அந்தஸ்து கட் சியில் கிடைக்கவில்லை எனும் அதிருப்தியால் ஐ .தே .க விலிருந்து விலகி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட் சியை ஆரம்பிக்கிறார் S.W.R.D. பண்டாரநாயக்கா .யானை பலம் கொண்டஐ தே க வை வீழ்த்த சிங்கள – பௌத்த தேசிய வாதத்தை கையில் எடுக்கிறார் பண்டா . நான் ஆடசிக்கு வந்த 24 மணிக்குள் சிங்கள மட்டும் சட்டம் .
அதாவது சிங்களம் மட்டுமே அலுவலக மொழி என பிரகடன படுத்துகிறார் .இனி சிங்களம் கற்றாலேஅன்றி அரச பதவி கிடைக்காது எனும் நிலை வரவே தமிழ் பேசும் மக்கள் கொதித்து எழுகிறார்கள் . ஆனால் சிங்கள மக்கள் மன மகிழ்கிறார்கள் . எவ்வளவு தான் சுயநலத்துடன் செயல் பட்டிருந்தாலும் கல்விமான் ஆன பண்டாவின் மனசாட்சி உறுத்தவே அப்போது தமிழரின் தலைவராக தன்னை நிலை நிறுத்திய செல்வாவுடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுகிறார் பண்டார நாயக்க.
.
பண்டாவின் அரசியல் எதிரியான ஜெயவர்த்தன ,களனி பாதை யாத்திரையை சிங்கள மக்களுடனும் புத்த பிக்குகளுடனும் ஆரம்பித்து பண்டா மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே உடன்படிக்கையை கிழித்து எறிகிறார் பண்டா .
.அன்றிலிருந்து இன்றுவரை ஆடசியில் இருக்கும் சிங்கள தலைமைகள் கொண்டுவரும் தீர்வை எதிர் தரப்பிலிருக்கும் சிங்கள தரப்பு மாறி மாறி எதிர்ப்பது என்பது வெறும் கட் சி அரசியலுக்காகவே தொடர்ந்து நடந்து வருகிறது .
தமிழ் கட்சிகள் முன்னர் தமிழரசுக் கட்சி – தமிழ் காங்கிரஸ் என்று பிரிந்து ஒரு போட்டி அரசியலைச் செய்தார்கள் .
பின்னர் ஒன்றிணைந்த போது மிகப்பெரிய துரோகத்தை தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல முழு
இலங்கைக்குமே செய்தார்கள் . அது இளைஞர்களின் மன விரக்தியை
தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தமது அரசியல் கோட்டைகளுக்குள் இலங்கை சுதந்திர கட் சி போன்ற தேசிய கடசிகளை நுழையவிடாமல் தடுப்பதற்கு தமிழ் இளைஞர்களில் வன்முறையை ஏவினார்கள் . அந்த இளைஞர்கள் மூலம் அரசியல் எதிரிகளை அழிக்கவும் முற்பட்டார்கள். அன்று தொடங்கி 30 வருடமாக நீடித்த ஆயுத போரும் அதன் விபரீத விளைவுகளும் நாம் எல்லோரும் அறிந்ததே .
இப்போது தவறு எங்கே நடந்தது என்று கவனிக்க வேண்டும் .வடக்கில் இளைஞர்கள் தரப்படுத்தல்
போன்றவற்றால் உயர்கல்வி வாய்ப்புகள் இன்றி விரக்தியில் ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் தரப்படுத்தலால்தான் பின் தங்கிய பகுதிகளில் இருந்த அனைத்து இன மாணவர்களாலும் பல்கலைக் கழகம் செல்ல முடிந்தது. அதற்கு முன் நகர்புற பெயர் கொண்ட பணக்கார உயர் குடி மக்களால் மட்டுமே பல்கலைக் கழகங்களுக்கு செல்ல முடிந்தது. அந்த மாற்றம் வந்த பின் கிராம புற ஏழை மாணவர்களால் கூட பல்கலைக் கழகம் செல்ல முடிந்தது. இந்த தரப்படுத்தலைக் கூட தமிழர்கள் தவறாக பயன் படுத்தினார்கள். உதாரணமாக யாழ்பாணம் போன்ற சிறந்த கல்வியை பெற்ற மாணவர்கள் வன்னி போன்ற பகுதிகளுக்கு சென்று இலகுவாக பல்கலைக் கழகங்களுக்குள் உட்புகுந்தார்கள். இதுபோல சிங்கள பகுதிகளும் நடந்தன.
தெற்கில் படித்தும் வேலைவாய்பில்லை என்ற விரக்தியில் சிங்கள இளைஞர்கள் ரோகண விஜேவீர (JVP) தலைமையில் ஆயுதம் ஏந்தினார்கள் . அவர்களது ஆயுத போராட்டமும் வெற்றி பெறவில்லை. அவர்களது போராட்டத்தை சிங்கள மக்களே ஆதரிக்கவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் வாய்ப்புக்களின்மையே அன்றி இனப்பிரச்சினை அல்ல .
இந்த பொருளாதாரப்பிரச்சினையை கவனத்தில் கொள்ளாது சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இருதரப்பு அரசியல் தலைவர்களும் சுய நலத்திற்காக இனவாத மதவாத தீயால் இந்த நாட்டை எரித்து சுடுகாடாகியது என்பதே உண்மை .ஆனால் இந்த தீ தணியாமல் கொழுந்து விட்டு எரிய காரணம் என்ன ?
இந்த இனவாதமும் மதவாதமும் வறிய நாடுகளில் எடுபடுவதுபோல் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் எடுபடுவதில்லை .உதாரணமாக சுவிற்சர்லாந்தில் பிரெஞ்சு ,இத்தாலி,ஜேர்மன் மற்றும் ரேட்டோ ரெமானிஸ் என 4 மொழி பேசும் இனங்கள் வாழுகின்றன .அவர்கள் ஒற்றுமையாக சுபீட்ஷமாக வாழ்கின்றனர்.
அவ்வளவு தூரம் ஏன் ,எங்களுக்கு பிறகு சுதந்திரம் கிடைத்த எங்களைவிட சிறிய நாடான சிங்கப்பூரில் கலாசார ரீதியாக ,மொழி ரீதியாக வேறுபட்ட மலாய்,சீன இந்திய இனத்தவர்கள் இருக்கிறார்கள் .
இதேபோலத்தான் மலேசியாவும். ஆனால் அந்த நாட்டினை கட்டியெழுப்ப Dr. Mahadhir Mohamad போலவும் Lee kuan yew போலவும் தலைவர்கள் நமக்கு கடந்த 72 வருடமாக அமையாதது எமது துர்பாக்கியம்.
இந்த மூன்று உதாரணங்களிலும் அறியக்கூடியது ஒன்றுதான் , ஒரு தேசம் அதன் எல்லா குடிமக்களுக்கும் தாராளமாக பகிர தேவையான பொருளாதார வளங்களை கொண்டிருந்தால் குடிமக்களிடையே பிணக்குகள் பூதாகரமாக இருக்காது .
.
இலங்கை எப்படி பொருளாதார வளங்களை பெருக்க முடியும்?
மலேசியா ,சிங்கப்பூர் போல எம்மாமல் முன்னேற முடியுமா ? நிற்சயமாக முடியும்! தண்ணீரோ அல்லது விவசாயமோ செய்ய முடியாது பெரும் நிலப்பரப்பு ஒன்று கூட இல்லாத சிங்கப்பூரால் உலகின் பலமான ஒரு நாடாக திகிழ முடியுமானால் , ஏகப்பட்ட வளங்கள் உள்ள எமது நாடு பின் தங்கி போனதற்கு என்ன காரணம் என சிந்திக்க வேண்டும்.
அதிலும் இலங்கையைப் போல ஒரு நாடாக சிங்கப்பூரை ஆக்க போவதாக சிங்கப்பூரின் லீ குவான்யூ சொன்னார். அவர் தனது நாட்டை உலகு மெச்சும் அளவுக்கு மாற்றினார். ஆனால் இன்று சிங்கப்பூர் போல இலங்கையை கொண்டு வரவேண்டும் என பேச்சில் மட்டும் பேசுகிறார்கள். செயலில் அல்ல.
இன்று உலகெங்கும் மென் பொருள் உற்பத்தி அதிக வருமானம் ஈட்டும் துறையாக உள்ளது. ஆனால் இலங்கை அந்த துறையில் சொல்லு மளவுக்கு இல்லை . நான் இலங்கையில் இருந்த காலத்தில் யாழ் மாவட்ட மாணவரும் , மாத்தறை மாவட்ட மாணவரும், கணிதம் மற்றும் இயற்பியலில் அதீத புள்ளிகளை க.பொ .த உயர்தரத்தில் ஆண்டுதோறும் பெறுவர் . இவைமென்பொருள் மற்றும் கணனி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மிளிர அத்தியாவசியமானவை தான். ஆனால் அவர்களுக்கு ஆங்கிலத்தையும் ஆழமாக கற்பித்தால் யாழ்ப்பாணத்தையும், மாத்தறையும் இன்னொரு பெங்களூராகவும் ஹைட்ரபத்தாகவும் மாற்றலாம் . இந்த துறையை விருத்தி செய்ய இந்தியா எமக்கு உதவலாம் .
இதேபோல வடக்கில் வல்லிபுரம் -அம்பன் பகுதியிலும் மேல் மாகாணத்தில் Ekala யிலும் உயர்தர சிலிக்கா இருக்கிறது . China வின் உதவியோடு நாம் ஏன் semi-conductor industry /micro chip industry ஐ இந்த இரண்டு இடங்களிலும் கொண்டுவர முடியாது .
மன்னார் கண்டமேடைப் பகுதியிலுள்ள அரிய வகை அல்கா உட்பட கடல் தாவரங்களிலிருந்து பல விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள் செய்யலாம்.அதேபோல் நாம் கவனிக்காமலே இருக்கும் கற்றாழை அழகு சாதன பொருட்கள் மற்றும் குளிர்பானம் போன்ற பல பொருட்கள் செய்ய பயன்படுகிறது.இதைவிட இலங்கை கைவினை பொருட்களுக்கும், புடவைகளுக்கும் வெளிநாட்டில் கிராக்கி உண்டு .உல்லாச பிரயாண துறையை மேலும் நவீனப்படுத்தலாம் . இப்படியே அடுக்கி கொண்டே போகலாம்.
எம்மால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு வரவேண்டும் . வெளிநாடுகளின் தலையீடு எமக்கு அரசியலில் தேவையில்லை . முடிந்தால் அவர்கள் எங்கள் நாட்டில் முதலீடு செய்யலாம் .
ஆனால் அவை எல்லாவற்றையும் செய்வதற்கு தனியார் முதலீடு.முக்கியமாக Foreign Direct Investment (FDI) ஐ இலங்கை பால் கவருவது முக்கியம் . அதற்கு அரசியல் தலையீடு அற்ற ஊழலற்ற வெளிப்படையான அரச நிர்வாகம் வேண்டும். அதற்கு ச ட் ட ஆக்கம் , சட்ட நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று ஜன நாயகத்தின் தூண்களும்யும் ஊடகங்களு ம் முற்றான சுயாதீனமாக இயங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றம் வேண்டும்.சில நூற்றாணடுகளுக்கு முன் பொருளாதரத்தில் எகிப்து பிரித்தானியாவை விட முன்நின்றது. ஆனால் இன்று ஜனநாயத்தின் நான்கு தூண்களையும் பிரித்தானியா பலப்படுத்தி ஒரு சுமுக சூழலை உருவாக்கியதால் அது எகிப்தைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறது. அபிவிருத்தி அடைந்த எல்லா நாடுகளிலும் இதுவே நிலைமை.
சுதந்திரம் கிடைத்த நாள்களிலிருந்து ஏற்பட் ட எல்லா அழிவுகளுக்கு எல்லா சமுகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய எல்லா தலைவர்களும்தான் காரணம் .ஒருசிலரை மட்டும் நாம் குறை கூறமுடியாது .ஒருசிலர் மட்டும் பொறுப்பு கூறவும் முடியாது . ஏனெனில் ஆட் சியில் இருக்கும் தலைவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதால் குடிமக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லாது போனால் எம்மை போன்ற சிறிய நாடுகள் வல்லரசுகளின் மிதி நிலமாகவே தொடந்திருக்கும் .
நாங்கள் இன – மத பேதங்களை கடந்து ஒற்றுமையாக இல்லாவிட்டால் தமது புவிசார் அரசியல் நலன்களுக்காக எம்மைப் பிரித்து அதற்குள் தம் முகவர்களை புகுத்தி தொடர்ந்து எமது ஆட்சி தலைமைகளுக்கு குடைச்சலை கொடுப்பதோடு எமது நிம்மதி முன்னேற்றம் என்பவற்றை குலைப்பதற்கு இந்த வல்லரசுகளுக்கு நாம் இனியும் இடமளிக்கக்கூடாது.
கடந்த கால தவறுகளை மறந்து மன்னித்து எதிர்காலத்தை பற்றி மட்டுமே சிந்திப்போம் .
புதிய இலங்கையின் இனிய விடிவுக்காக இளைய தலைவர்களை தேர்வு செய்வோம் . இவ்வளவு நாளும் அப்புக்காத்துமாரை தெரிந்து நாங்கள் கண்டது ஒன்றுமில்லை , ஆப்பிழுத்த குரங்கானதுதான் மிச்சம்.இனியாவது பொருளாதாரம் , தொழில் நுட்பம் அபிவிருத்தி ,சமுக விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆற்றல் பொருந்தியவர்களை தெரிவு செய்து எல்லோரும் கனவு காணும் தென்னாசியாவின் அற்புதமாக (Miracle of South Asia) இலங்கையை மாற்றுவோம் . அந்த மாற்றத்திற்கான சக்தி உங்களிடம் தான் உள்ளது .ஆகஸ்ட் 5இல் காலை 7 மணிக்கு அந்த புதிய விடியலை நோக்கி புறப்படுவோம்.
நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெறும் நான் உங்கள் மகன் ,சகோதரன் , நண்பன்
– சுபன் தாமு
நன்றி.
Comments are closed.