தேர்தலில் போட்டியிடுபவர்களில் அரைவாசிப் பேர் அரசின் முகவர்கள் – சரவணபவன்

கூட்டமைப்பிற்கு ஐந்து ஆசனங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆறாவது ஆசனமும் கிடைக்கக்கூடிய கள நிலவரம் காணப்படுகின்றது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் 330 வேட்பாளர்களில் அரைவாசி வேட்பாளர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சரவணபவன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று கிட்டுப் பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் எல்லாவிதமான கௌரவத்தையும் இழந்து எல்லோரையும் விமர்சித்து வருகிறார். இறுதியாக கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவுடன் டீல் வைத்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார். தான் என்ன செய்யப் போகின்றேன் என்பதைப் பற்றி பேசாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பிழை பிடித்துக் கொண்டு அதனை வைத்து அரசியல் செய்து வருகின்றார்.
விக்னேஸ்வரன் முதலமைச்சராக வெற்றிபெற்ற போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னால் பதவிஏற்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் தனது சம்மந்தி வாசுதேவ நாணயக்காராவுடன் இணைந்து மகிந்த ராஜபக்சவிற்கு முன்னால் பதவியேற்றார். முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தானே கூட்டமைப்பின் தலைவர் என நினைத்தார். அதனாலேயே கூட்டமைப்பின் தலைமையிடம் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவில்லை.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பரம்பரைக்கட்சி. அதில் சாதாரண பொதுமகனுக்கு தலைமைத்துவம் கிடைக்காது. இதானாலேயே விக்னேஸ்வரன் அவர்களோடு இணையாமல் புதிய கட்சியினை தொடங்கினார். கூட்டமைப்பின் தலைமைப் பதவி கிடைக்கவில்லை என்றதும் கட்சியை உடைக்க நினைத்தார். கூட்டமைப்பு உடைந்துள்ளதா இல்லையா என்பதை இந்த தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள்.
அரசாங்கத்திற்கு தமது கட்சியில் இருந்து வடக்கு கிழக்கில் தேசியப்பட்டியல் இன்றி நேரடியாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர். தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்து தங்களை அங்கீகரித்துள்ளனர் என சர்வதேசத்திற்கு அரசு காட்ட முயல்கின்றது. அதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க ஜனாதிபதி பணத்தினை வாரி இறைக்கின்றார்.
கடந்த காலங்களில் இருந்த டக்ளஸ் தேவானந்தாவினுடைய அடாவடிகளை விட தற்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடாவடி அதிகரித்துள்ளது. சுதந்திரக் கட்சிக்கு விழும் வாக்குகள் கோட்டபாயவிற்கானதாக அமைந்துவிடும். எனவே எமது இளைஞர் யுவதிகள் விளிப்படைய வேண்டும்.
கடந்த காலங்களில் கூட்டமைப்பு பலம்வாய்ந்த அமைப்பாக இருந்ததால் தான் நாம் பலவற்றை சாதித்தோம். பல மில்லியன் கணக்கான அபிவிருத்திகளை மேற்கோண்டோம். நீண்டகாலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் காணிகளை விடுவித்தோம். எமது பணிகளை தொடர எமக்கு தொடர்ந்து ஆணை தாருங்கள், என்றார்.
Comments are closed.