இலங்கை முழுவதும் 1101 தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் – சீ.எம்.இ.வீ

இலங்கை முழுவதும் 1101 தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள், வன்முறைகள் பதிவாகியுள்ளன. கட்சி ரீதியாக பார்க்கின்ற போது பொதுஜன பெரமுன மீது 608 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவாகியுள்ளன என தேர்தல் வன்முறைகளுக்கான கண்காணிப்பு நிலைய(சீ.எம்.இ.வீ) கள முகாமையாளர் ஏ.எம்.என்.விக்டர் தெரிவித்தார்.
யாழ் ஊடக மன்றில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை முழுவதும் 1101 தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள், வன்முறைகள் பதிவாகியுள்ளன. கட்சி ரீதியாக பார்க்கின்ற போது பொதுஜன பெரமுன மீது 608 தேர்தல் விதிமுறை மீறல்களும், ஐக்கிய மக்கள் சக்தி மீது 188 தேர்தல் விதிமுறை மீறல்களும், ஐக்கிய தேசியக் கட்சி மீது 67 விதிமுறை மீறல்களும், இலங்கை தமிழரசுக் கட்சி 32, தேசிய மக்கள் சக்தி 33, ஈழமக்கள் ஜனநாயக கட்சி 18, ஏனைய கட்சிகள் 115ஆகவும் காணப்படுகின்றது.
மாவட்ட ரீதியாக பார்க்கின்ற போது அதி கூடிய தேர்தல் வன்முறைகள் இடம்பெற்ற மாவட்டமாக குருநாகல் மாவட்டம் காணப்படுகின்றது. அங்கு 98 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் 42 தேர்தல் விதிமுறை மீறல்களும்,
யூலை இரண்டாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் முதலாம் திகதிவரைக்குமான காலப்பகுதியில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 1870 மில்லியன் ரூபாவினை தேர்தல் விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ளன. கட்சி ரீதியாக பார்க்கின்ற போது 903 மில்லியன் ரூபாவினை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரும், 501 மில்லியன்களை ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சி 253 மில்லியன்களையும், தேசிய மக்கள் சக்தி 103 மில்லியன், எங்கள் மக்கள் சக்தி 40 மில்லியன், இலங்கை தமிழரசுக் கட்சி 45 மில்லியன்கள் மேலும் வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 25 மில்லியன்களையும் செலவிட்டு இருக்கின்றன.
பிரச்சாரங்கள் நிறுத்தப்பட்ட காலப்பகுதிகளில் யாழ்மாவட்டத்தில் இரகசியமாக தேர்தல் கூட்டங்கள் இடம்பெறுவதாகவும்,கட்சி சார்ந்த வேட்பாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

கோவிட் 19 நெருக்கடி நிலவுவதால் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். வாக்காளர்கள் போலிச் செய்திகள் எவை என்பதனை அடையாளம் காணவேண்டும். ஐனநாயகத்தின் மிகப்பெரும் பலமான வாக்களிப்பை நிறைவேற்றுங்கள். 15 மாதிரித் தேர்தல்களில் கண்காணித்ததன் அடிப்படையில் நாம் வசிக்கின்ற வீடுகளை வீட வாக்களிப்பு நிலையம் சுத்தமானது என கூறலாம்.

வாக்களிப்பு நிலையத்திற்கு வரும் போது வாக்காளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரவும். அது தொடர்பான விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவிதமான அச்சமும் இன்றி வாக்களியுங்கள், என்றார்

Comments are closed.