சஜித்தின் தேசிய பட்டியலில் ஒன்றை யாழிற்கு வழங்கக் கோரிக்கை

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்கள் பெருமளவில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியதற்கு பிரதி உபகாரமாக யாழ் தேர்தல் மாவட்டத்துக்கு தேசியப்பட்டியல் ஒன்றை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுதந்திர கடற்றொழிலாளர் மையத்தின் தலைவர் ம.ம.அருள்தாஸ் தெரிவிக்கையில் இம்முறை தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏனைய பகுதிகளில் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த நிலமையில் யாழ் தேர்தல் மாவட்டத்துக்கு உங்கள் கட்சி சார்பில் பணியாற்றுவதற்கு தேசிய பட்டியல் ஒன்றை வழங்குமாறு கோருகின்றோம். இத்தேர்தலில் புதிதாக உங்கள் கட்சி போட்டியிட்டது. எனினும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது இவ்வாறிருக்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் உங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கினர். நீங்கள் தேர்தல் பிரசாரத்துக்காக யாழ் வந்த சமயம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்திருந்தீர்கள்.

எனவே வாக்களித்த யாழ் மக்களுக்கு கைமாறாக தேசிய பட்டியல் ஒன்றை வழங்குமாறு கோருகின்றோம். உங்கள் கட்சி தேசிய கட்சியென்ற வகையில் சகல இடங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது உங்கள் கட்சியை பலமடைய செய்யும்.
கடந்த முறை தேர்தலில் சுதந்திர கட்சி யாழில் பிரதிநிதித்துவத்தை இழந்த போதும் தேசிய பட்டியல் மூலம் இடமளித்ததால் இத்தேர்தலில் ஒரு ஆசனத்தினை பெற்றுக் கொண்டது.
எனவே விடயங்களை பரிசீலித்து தேசிய பட்டியலில் யாழுக்கு ஒன்றை வழங்க முன்வரவேண்டும் எனவும் சஜித்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.