சசிகலாவின் அனுதாப வாக்குகளை சுமந்திரன் சூறையாடியுள்ளார் – த.வி.கூ துணைத்தலைவர்

சசிகலாவிற்கு கிடைக்கக்கூடிய அனுதாப வாக்கினை சூறையாடி மோசடி செய்து சுமந்திரன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றிருக்கின்றார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட துணைத் தலைவர் அரவிந்தன் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு ஆதரவாக தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள ரவிராஜ் சிலையருகே இடம்பெற்ற கவணயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கிய தாய் கட்சி என்ற வகையில் நாம் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். கூட்டமைப்பினர் தங்களின் இருப்பிற்காவே ரவிராஜினுடைய துணைவியாரை தேர்தலில் களமிறக்கியுள்ளனர் என்பதனை நாம் முன்பே கூறியிருந்தோம். அது தற்போது உண்மையாகியுள்ளது.

ரவிராஜினுடைய துணைவியாரான சசிகலாவிற்கு கிடைக்கக்கூடிய அனுதாப வாக்கினை சூறையாடி மோசடி செய்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்றிருக்கின்றார். இது ஒரு மோசமான அரசியல் கலாச்சாரமாகும்.

இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உடனடியாக நிறுத்த வேண்டும். சசிகலாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். தமிழ் மக்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த பிரதேசத்தினை சேர்ந்த பிரதிநிதியின் வாக்குகள் சூறையாடப்பட்டிருந்தன.இப்போது சசிகலா ரவிராவிஜினுடைய வாக்குகப் சூறையாடப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்சியாக ஒரு பிரதேசத்தினுடைய வாக்குகளை சூறையாடி அந்த பிரதேசத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்வது படு மோசமான செயலாகும்.
இவ்வாறான அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும். இதற்கு கூட்டமைப்பின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட காலதாமதம் தொடர்பில் எமக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அதனடிப்படையிலேயே சசிகலா தரப்பில் நியாயம் இருப்பதாக நம்புகின்றோம். தேர்தல்கள் முடிவுகள் காலதாமதமானவை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பதில் கூறவேண்டும், என்றார்.

Comments are closed.