எனது அரசியல் பயணம் முடியவில்லை; மாகாண சபைத் தேர்தலில் குதிப்பேன்! – ஜனகன் அறிவிப்பு
“பொதுத்தேர்தல்தான் முடிவடைந்துள்ளது. எனது அரசியல் பயணம் முடியவில்லை. எனவே, வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கலாநிதி.வி.ஜனகன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் சமூகம் அக்கறையுடன் வாக்களித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கணிசமான அளவு வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அத்துடன் தமிழ் பேசும் சமூகம் 70 சதவீதம் தமது வாக்கினைப் பதிவு செய்துள்ளமை பாராட்டதக்க விடயம்.
நாடாளுமன்றத் தேர்தல் சுமுகமாக இடம்பெறுவதற்கும், எனக்கு ஆதரவளித்த கொழும்பு மாவட்ட பொதுமக்கள், கட்சித் தலைமை, ஆதரவாளர்கள், வாக்காளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, மக்கள் ஆணையைப் பெற்றே எனது அரசியல் பயணம் தொடர வேண்டும் என நினைக்கின்றேன். எனவே, தேசியப்பட்டியல் வாய்ப்பைப் கோரமாட்டேன். அடுத்து நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்; மக்கள் ஆதரவைப் பெறுவேன்” – என்றார்.
Comments are closed.