கட்சியின் மீள் எழுச்சிக்கு உதவிபுரிந்த மக்களுக்கு நன்றி – சுரேந்திரன்
ரெலாவிற்கு மூன்று ஆசனங்களை தந்ததன் மூலம் கட்சியை மீள் எழுச்சி பெறுவதற்கு உதவி புரிந்தமைக்கு மக்களுக்கு நன்றி கூறுகின்றேன் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட எனக்கு எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும், மாற்றத்தை நோக்கி உங்கள் பெறுமதியான வாக்குகளை செலுத்திய அனைவருக்கும் எனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் வடக்கு கிழக்கில் அனைத்து பிரதேசங்களிலும் போட்டியிட்ட எம் வேட்பாளர்களுக்கு நீங்கள் வழங்கிய ஆதரவினால் வன்னியில் எமது தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தலைமைக்குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் கிழக்கில் கட்சியின் பொருளாளர் ஜனா கருணாகரம் ஆகியோரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ததன் மூலம் கட்சியை மீள் எழுச்சி பெறுவதற்கு உதவி புரிந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.
போட்டியிட்டவர்களிலும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாது வெற்றி வாய்பை தவற விட்டவர்களுக்கும் உங்கள் விருப்பு வாக்குகளை செலுத்தியமைக்கும் மீண்டுமொருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புகள், மற்றும் ஆர்வலர்களுக்கும் நன்றி கூறுகிறேன், என்றார்.
எங்களுடைய அரசியல் பயணத்தை தமிழ்த் தேசியத்தின் உரிமைக்கும் அபிவிருத்திக்கும் உத்வேகத்துடன், உங்களது ஆதரவுடனும், ஒருங்கிணைப்புடனும், அர்ப்பணிப்புடனும் எதிர்காலத்தில் தொடர்ந்தும் முன்னெடுப்போம், இணைந்திருப்போம் என்றார்.
Comments are closed.