சுமார் 26 வருடங்களுக்குப் பின் ஐ.தே.க. தலைமையில் மாற்றம்!
விடைபெறும் அறிவிப்பை விடுத்தார் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளளார்.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இதன்படி புதிய தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன, அகிலவிராஜ் ஆகிய நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இவர்களில் ஒருவரை கட்சி செயற்குழு இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யும் என்றும், செயற்குழுவின் தீர்மானத்துக்கு அங்கீகாரம் பெறுவதற்கு கட்சி சம்மேளனமும் கூட்டப்படும் எனவும் தெரியவருகின்றது.
இதுதொடர்பில் நாளைமறுதினமும் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
1994 நவம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த 26 வருடங்களாக அப்பதவியில் நீடித்தார்.
பதவி விலகுமாறு பல தடவைகள் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோதிலும் – அவற்றையெல்லாம் சாதூர்யமாகச் சமாளித்து – சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கையுடன் தலைவராக வலம் வந்தார்.
தேர்தல்களில் தோல்விகள் தொடர்ந்தாலும் – நெருக்கடிகள் தலைதூக்கும் வேளைகளிலும் தலைமைத்துவ சபை உருவாக்கம், கட்சி மறுசீரமைப்புக்காக விசேட குழு அமைப்பு எனப் பல வியூகங்களைக் கையாண்டு வழமையாக இழுத்தடிப்பு செய்யும் ரணில் விக்கிரமசிங்க, இம்முறை உறுதியான முடிவை எடுத்துள்ளார்.
Comments are closed.