தமிழரசின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு ஒரு முடிவு எடுப்போம் – சித்தார்தன் கொந்தளிப்பு
பங்காளிக்கட்சிகளோடு கலந்தாலோசிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் தொடர்பான தீர்மானத்தினை தன்னிச்சையாக மேற்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பில் ரெலோவும் நாங்களும் இணைந்து ஒரு முடிவினை மேற்கொள்ளவுள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைக் கழக (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் பலர் கருத்துக்களை கூறிவருகின்றனர். என்னைப் பொறுத்தவரை கட்சிகள் ஒன்றிணையாது விட்டாலும் ஆகக்குறைந்தது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இனப்பிரச்சினை சம்மந்தமாக ஒற்றுமையான செயற்பாடுகளை மேற்கொண்டாலே மேலானது. அதன் பின்னர் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி சிந்திக்கலாம்.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசியக் கட்சியின் வேட்பாளர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இடத்தில் குறித்த கட்சியினர் பிரபாகரனின் மண்ணை கைப்பற்றிவிட்டோம் என்றனர். அந்தளவிற்கு தமிழ்த் தேசியத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இளம் வாக்காளர்களே தேசியக் கட்சிக்கு அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர். இளம் வாக்காளர்களின் வாக்குகளை பெற தவறிவிட்டோம். இளம் வயதினர் வேலைவாய்ப்பினை மையப்படுத்தியே வாக்களித்தனர். அதற்காக நாம் இளைஞர்களை குறை கூற முடியாது. வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தால் எமக்கு மகிழ்ச்சியே, என்றார்.
Comments are closed.