யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இன்று

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று(12) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந. தனேந்திரனுடையது. உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ், விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆறு பேரிலிருந்து ஐந்து பேரைத் தெரிவு செய்வதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவருடன், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேரவையினால் முன்மொழியப்பட்ட இருவரையும் கொண்ட, மதிப்பீட்டுக்குழு இன்று காலை கூடவிருக்கிறது. இந்த மதிப்பீட்டுக்குழு ஒவ்வொரு விண்ணப்பதாரிகளாலும் தனித்தனியாக குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும் அளிக்கைகளையும் மதிப்பீடு செய்த பின்னர், ஆறு பேரில் இருந்து திறமை அடிப்படையில் புள்ளிகளைப் பெறும் ஐந்து பேரது விவரங்களைப் பேரவை உறுப்பினர்களின் மதிப்பீட்டுக்காக இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கும்.

மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களால் ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும், தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டதைப் போலவே, ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் ஒவ்வொரு விண்ணப்பதாரிகளையும் சுற்றறிக்கையின் படி தனித்தனியாக மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்குவர். இந்த மதிப்பீடு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

Comments are closed.