கோட்டாபய சர்வாதிகாரி என்பதால் நாங்கள் பயந்துவிட்டோம் அன்று அர்த்தம் இல்லை : முள்ளிவாய்க்காலில் விக்கி
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சர்வாதிகாரத்துக்குரிய சகல விதமான தகைமைகளையும் நான் காண்கின்றேன். எனவே, அவர் விரைவில் சர்வாதிகாரியாக மாறுவார்.”
– இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் உள்ளடங்கலான உள்நாட்டலுவல்கள் அமைச்சு பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், “இராணுவப் பின்னணியைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் அவர் மறுநாளே ஜனநாயகத்துக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவருடைய பின்னணியை ஒத்ததாகவே நிர்வாகமும் அமையும். அதற்கு ஏற்றவாறு கோட்டாபய செயற்படுகின்றார்.
எல்லா வகையிலும் இராணுவ ஆட்சியைக் கொண்டு வரக்கூடிய விதத்தில் அவர் செயற்படுகின்றார். இராணுவ ஆட்சி என்று கூறாமலேயே, ஜனநாயக விதத்தில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த அவர் முயல்கின்றார்.
ஹிட்லர் கூட முறையாகத்தான் தெரிவுசெய்யப்பட்டு பதவிக்கு வந்தார். அதன் பின்னர்தான் அவர் சர்வாதிகாரியாக மாறினார். சர்வாதிகாரத்துக்குரிய சகல விதமான தகைமைகளையும் நான் கோட்டாபயவிடம் காண்கின்றேன். அந்த அடிப்படையில்தான் இவர் செல்வார் என்றும் நான் நினைக்கின்றேன். அதற்காக நாங்கள் பயந்துவிட்டோம் அன்று அர்த்தம் இல்லை” – என்றார்.
Comments are closed.