முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த அமெரிக்க துணை ஜனாதிபதியின் வேட்பாளர் கமலா ஹரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இந்த கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் (வயது 55) போட்டியிடுகிறார்.

இதனை நேற்று முன்தினம் ஜோ பைடன் அறிவித்தார். கமலா ஹரிசின் தந்தை ஜமைக்காவை சேர்ந்த டொனால்டு ஹாரிஸ் ஆவார். தாய், சென்னையை சேர்ந்த சியாமளா கோபாலன்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக ஜோ பைடனுடன் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் பிரசார நிகழ்ச்சியில் கமலா ஹரிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில் தனது தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

என் வாழ்க்கையில் என் அம்மா சியாமளாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் என்னையும், சகோதரி மாயாவையும் எப்படி வளர்த்தாரென்றால், நாங்களும், ஒவ்வொரு அமெரிக்க தலைமுறையும் பேரணியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் வளர்த்திருக்கிறார்.

‘பிரச்சினை வரும்போது அமர்ந்து அதைப்பற்றி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது, மாறாக அதில் இருந்து மீண்டு வர ஏதாவது செய்ய வேண்டும்’ என்றே எனது அம்மா அடிக்கடி கூறுவார்.

ஆகவே நான் கொஞ்சம் செய்திருக்கிறேன். அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றம் செதுக்கிய சொற்களை உண்மையானதாக மாற்ற, சட்டத்தின் கீழ் சம நீதி கிடைக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன்.

மாவட்ட நீதிபதியாக நான் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்களில், உதவிக்காக தேவைப்பட்டவர்களுக்காக போராடி வருகிறேன். கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றியபோது, ஆயுதங்கள், மனிதர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பன்னாட்டு குற்றவியல் அமைப்புகளில் நிறுத்தினேன்.

என்று கமலா ஹரிஸ் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டதை அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் வரவேற்று உள்ளனர். ஒட்டுமொத்த இனத்துக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.