தேசியப் பட்டியலை ஐக்கிய மக்கள் சக்திக்கு விட்டுக் கொடுத்தோம் – இராதாகிருஷ்ணன்
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை அதில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து விட்டுக்கொடுப்புச் செய்தோம். ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றன. அதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தைக் கருதி தமிழ் முற்போக்கு கூட்டணியும், முஸ்லீம் காங்கிரஸும் இணைந்து விட்டுக் கொடுப்பு செய்தோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தேசியப் பட்டியல் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியோடு கூட்டணி வைத்துக் கொண்ட சிறுபான்மைக் கட்சிகள் தனித்து இயங்கப் போவதாக கூறியிருந்தோம். தேசியப் பட்டியல் தொடர்பில் ஒரு அழுத்தத்தை பிரயோகிப்பதற்காகவே அவ்வாறு கூறியிருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணியில் எதுவித மாற்றமும் இன்றி தொடர்ந்து பயணிப்போம்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சிறுபான்மை சார்பில் இரு அமைச்சர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். அதுபோல அமைச்சின் செயலாளர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதுவே தற்போதைய அரசிற்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்குமான வேறுபாடு ஆகும்.
நேற்று முன்தினம் அமைச்சர்கள் பதவியேற்பு வைபவம் இடம்பெற்ற வளாகத்திற்கு அருகில் காணப்பட்ட தேசியக் கொடியில் சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறங்கள் அகற்றப்பட்டிருந்தன. சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வித நன்மைகளையும் செய்யப் போவதில்லை என்பது இச் செயற்பாடுகள் மூலம் புலனாகின்றது. இனிவரும் காலங்களிலும் உணர்ந்து கொள்வார்கள், என்றார்.
Comments are closed.