தேசியப்பட்டியல் சர்ச்சைக்கு முடிவுகாண முன்வாருங்கள் : துரைராஜசிங்கம்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முன்கொண்டுள்ள அனைவரும் முன்வரவேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குச் சரிவு காரணமாக ஒரேயொரு தேசியப் பட்டியல் நியமனமே கிடைக்கப்பெற்றது. வழமையாக இந்தத் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஒரு முடிவை எடுப்பார்கள்.
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் எடுக்கும் முடிவைத் தெரிவிப்பவனாகக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளே இருந்து வந்தன.
இம்முறை நான் திருகோணமலை சென்றபோது அவ்வாறான நடைமுறை முடிந்திருக்கும் என்ற கருதல் இருந்தது. ஆனால், அது தொடர்பில் தெளிவான விளக்கத்தைப் பெறவில்லை.
வழக்கம்போல் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடந்து முடிந்திருக்கும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. தேசியப் பட்டியல் தொடர்பில் பேசவேண்டும் வாருங்கள் என்று எனக்கு திருகோணமலையில் இருந்து அழைப்பு வந்தது.
நான் செல்ல முன்பாக தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கூறியபோது தான் வரவில்லை என்று சொன்னார். நான் திருகோணமலை சென்று தேசியப் பட்டியலுக்கு யாரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடலைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் செய்தோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட இடங்களில் அம்பாறை மாவட்டத்துக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. அதனை அங்கு வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை நான் முன்வைத்தேன்.
ஏற்கனவே நியமனக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் திருகோணமலையில் குகதாசனுக்குத் தேசியப் பட்டியல் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அதனை அமுல்படுத்துவது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் எனச் சொல்லப்பட்டது” – என்றார்.
Comments are closed.