வேட்பாளராகக் களமிறங்க திகா 2 கோடி ரூபா கேட்டார் – திலகர் பரபரப்புக் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமானால் 2 கோடி ரூபா அவசியம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார் என்று அச்சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் தெரிவான மூவரில் இருவர் ‘கலாநிதிகள்’ எனவும் அவர் எள்ளி நகையாடினார்.

“பொதுத்தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலில் செலவளிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை எனக் கூறப்பட்டது.

என்னால் 10 இலட்சம் ரூபா வரை செலவளிக்கக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால், மேசையில் 2 கோடி ரூபா வைத்தால் வாய்ப்பு வழங்கப்படும் எனத் திகாம்பரம் கூறினார். எதற்காக அந்தப் பணம் என தெரியவில்லை” எனவும் திலகர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கே தான் வாக்களித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.