நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவில் அதிகளவில் திரள்வதைத் தவிருங்கள்; மாவட்டச் செயலர்

தற்போதைய கோவிட் -19 நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் அடியவர்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க. மகேசன் கேட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா நாளைமறுதினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

நாட்டில் தற்போது உள்ள கோவிட் -19 பரவல் நிலமையினை கருத்திற் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றது. தேரோட்டம் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 18ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

தற்பொழுது பக்தர்கள் அதிகளவில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதனை நாங்கள் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார அறிவுறுத்தல்களை பக்தர்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையிலேயே சுகாதார நடைமுறைகளை பேணி சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களிலும் கலந்து கொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நல்லூர் கந்தனுடைய திருவிழா என்றால் லட்சோப லட்சம் மக்கள் ஒன்று கூடி நிற்கின்ற இடம். ஆகவே இந்த கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த சூழ்நிலையை அனுசரித்து செயற்படுத்த வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்தவாறே ஆலய உற்சவத்தினை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலமையை கருத்தில் கொண்டு இந்த தடவை நல்லூர் ஆலய தேர் உற்சவத்தன்று ஆலய வீதிகளில் ஒன்றுகூடாது சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய பிரசன்னத்தை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

கூடுமானவரை நீங்கள் வீடுகளிலிருந்து ஆலயத் தேர் உற்சவத்தின் காண முடியும். எனவே பக்தர்கள் இந்த விடயத்தினை கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நாங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா சூழ்நிலையினை மிகவும் கட்டுப்படுத்தி மிகவும் உச்சபட்சமாக இதனைக் குறைத்து உங்களை பாதுகாத்துள்ளோம். இந்த சூழ்நிலையிலே சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக செயற்பட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

எனவே நல்லூரானின் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்

Comments are closed.