சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனம் என்ற வேறுபாடு எங்கள் ஆட்சியில் இல்லை – மஹிந்த
“எமது ஆட்சியில் சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனம் என்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்து இன மக்களும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். இன ரீதியில் எவருக்கும் நாம் அமைச்சுகளை வழங்கவில்லை. தகுதி நிலையில் உள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறைக்கேற்ப மேலும் தகுதியானவர்களை இணைத்துக்கொள்வோம்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் என இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், இராஜாங்க அமைச்சுகளிலும் தமிழர்கள் இருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் – முஸ்லிம்களில் எவருமே நியமிக்கப்படவில்லை எனவும் எதிரணியினர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சிறுபான்மை இனத்தவர்களில் நால்வருக்கு மட்டுமே புதிய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது என்பதே எதிரணியினரின் இனவாதப் பரப்புரையின் தலைப்பாக உள்ளது. சிறுபான்மை இன மக்களை இந்த அரசு புறக்கணித்துள்ளது என்ற விசமத்தனமான சிந்தனையை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எதிரணியினர் விதைக்க முற்படுகின்றனர்.
எமது ஆட்சியில் சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனம் என்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்து இன மக்களும் இலங்கை மாதாவின் பிள்ளைகள்.
இன ரீதியில் எவருக்கும் நாம் அமைச்சுகளை வழங்கவில்லை. தகுதி நிலையில் உள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அமைச்சுகளின் எண்ணிக்கை வரையறைக்கேற்ப மேலும் தகுதியானவர்களை இணைத்துக்கொள்வோம்.
அதேவேளை, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களையும் நியமித்துள்ளோம். வடக்கிலுள்ள சகல மாவட்டங்களுக்கும் அபிவிருத்திக் குழுத் தலைவர்களாக தமிழ்ப் பிரதிநிதிகளையே நியமித்துள்ளோம். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பிரதிநிதி. அதேவேளை, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் அபிவிருத்திக் குழுத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி ஒருவரையே நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் ஒரே கண்ணோட்டத்திலேயே நாம் பார்க்கின்றோம். எந்த இனத்தையும் இனவாத நோக்குடன் நாம் பார்க்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோம்” – என்றார்.
Comments are closed.