ஒற்றுமை தொடர்ந்தால் வெற்றி இரட்டிப்பாகும்! – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத்
“கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், புத்தளம் வாழ் மக்கள் ஒன்றுபட்டதன் காரணமாகவே, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற முடிந்தது. இனிவரும் காலங்களிலும் இவ்வாறு ஒற்றுமையுடன் செயற்பட்டால் இதைவிட பாரிய வெற்றிகளைப் பெற முடியும்.”
– இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம், வேப்பமடுவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நடந்து முடிந்த பொதுத்தேர்தல், புத்தளம் சிறுபான்மை மக்களுக்கு நல்லதொரு செய்தியைக் கூறுகின்றது.
பெரும்பான்மையின கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் பின்னால், நாம் பிரிந்து நின்று அரசியல் செய்ததனாலேயே, முப்பது வருடங்களுக்கு மேலாக பிரநிதித்துவத்தை இழந்து தவித்தோம். சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் பின்னடைவு அடைந்தோம். பல்வேறு அநியாயங்கள் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்டன. நமக்கென்று நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் இல்லாததனாலேயே இந்தநிலை ஏற்பட்டது.
எனவே, இதனை அடைய வேண்டுமென்ற முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நீண்டகாலமாக ஈடுபட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் ரவூப் ஹக்கீமும் இதற்கு உடன்பாடு கண்டார். எல்லோரும் ஒன்றுசேர்ந்து கூட்டமைப்பை உருவாக்கியதனாலேயே, நாம் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது. ரணில், சஜித், மஹிந்த ஆகிய தலைவர்கள், இன்று புத்தளம் தொகுதியில் தமது பார்வையை செலுத்தும் நிலையை உருவாக்கியது நமது ஒற்றுமையே.
கூட்டமைப்பின் மூலம் தெரிவான அலி சப்ரி ரஹீம், சமூக அக்கறை கொண்டவர். இப்போது அவர் உங்கள் பலத்தினால் எம்.பியாகியுள்ளார். இவரின் கரங்களை பலப்படுத்துவோம்” – என்றார்.
Comments are closed.