அனைத்து தரப்பினரின் ஆலோசனையினைப் பெற்றே சகல கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் : ஜி.எல்.
கல்வியை மேம்படுத்துவது தொடர்பில் சம்மந்தப்பட்ட துறை சார் அனைத்து தரப்பினரின் ஆலோசனையினைப் பெற்றே சகல கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களின் தலைமையில் நாட்டின் கல்வித்துறையின் முன்னேற்றம் தொடர்பில் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடல் கல்வி அமைச்சில் (17)இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பாடசாலை அதிபர்கள், பெற்றோர், மாணவர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏனைய துறைசார் அமைப்புக்களை ஒன்றிணைத்து, நடைமுறையில் காணப்படும் பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்களுக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கொள்கை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாங்க அணுகுமுறை கீழிருந்து மேல்நோக்கிப் பயணிப்பது என்பதால், தீர்மானங்களை மேற்கொள்ள முன்னர் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளச் செயற்திட்டங்கள் மற்றும் கலந்தாலோசனைகளை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் மேலும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் போது பாடத்திட்டத்துடன் வேலைவாய்ப்புக்களுக்குக் காணப்படும் இணைப்புக்கள், கல்விச் செயல்பாட்டில் வெவ்வேறு கட்டங்களில் தொழிற்கல்வித் திட்டங்களை உருவாக்குதல், கொவிட் நிலைமைகளின் போது இணையக் கல்வித் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பது உள்ளிட்ட பல விடையங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உள்ளிட்ட மாகாண ஆளுநர்கள், அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட, திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன் பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட கல்வித்துறையின் சிரேஸ்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
– இக்பால் அலி
18-08-2020
Comments are closed.