வாக்குறுதியையும் நம்பிக்கையையும் வீணடிக்கக்கூடாது பிரதமர் மஹிந்த – சம்பந்தன் வலியுறுத்து

“அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதியையும், அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் வீணடிக்கக்கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

‘ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோம்’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த காலங்களில் எந்தவொரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் நீடிக்கவில்லை. கடந்த ஆட்சியில் அந்தப் பெரும்பான்மைப் பலம் இருந்த போதிலும்கூட இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் அந்தப் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லை.

ஆனால், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அவருடைய கட்சி இருக்கின்றது.

அந்தவகையில் அவர் நேர்மையாகச் செயற்பட்டு நாட்டினுடைய முன்னேற்றத்துக்கும் நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களது முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று நாம் நம்புகின்றோம்.

அவர் எடுக்கின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

ஒருமித்து இந்தக் கருமத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்.

எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதியையும், அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் வீணடிக்கக்கூடாது” – என்றார்

Comments are closed.