தேர்தல் போட்டியிலிருந்து விலகுகிறேன்; எனக்கு வாக்களிக்க வேண்டாம் – மங்கள சமரவீர
தான் எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாகவும், தனக்கான விருப்பு வாக்கை வழங்க வேண்டாம் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவருக்கு, விருப்பு வாக்கு இலக்கங்களுடன் இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 08 ஆம் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (09) பிற்பகல் மாத்தறையில் உள்ள அவரது வீட்டில் நடந்த கூட்டமொன்றில் கருத்து வெளியிட்ட, மங்கள சமரவீர மேற்படி தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,
இன்று (09) முதல் ‘எம்.பி. அரசியலில்’ இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இருக்கின்ற போதிலும், தனது விருப்பு இலக்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் மாத்தறை மாவட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமானது செயற்றிறனற்றதும், தூர நோக்கற்ற ஆட்சி என்றும், கடந்த ஆறு மாதங்கள் எனும் குறுகிய காலத்தில், அது நன்றாக நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஏற்படுத்தி, நாட்டை இராணுவமயமாக்கலுக்கு இட்டுச் செல்வதாகவும்,
அதன் மூலம் நாட்டில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்நிலையில், எதிர்க்கட்சி தனது பணி என்ன என்பது தொடர்பில் சரியான முறையில் அறியாமல் செயற்படுவதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின், ஐ.தே.க.வின் அடிப்படைக் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் அமைச்சர், கட்சி பிரிவடைந்தமை தொடர்பில் தான் வருத்தமடைவதாக தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் நாடாளுமன்ற அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் பணியாற்றியுள்ளதாகவும், இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் வாழ்வாதாரம், சகவாழ்வு, மனிதநேயத்தை, குறைந்தது ஒரு வீதத்தினாலாவது உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டே தான் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்காலப் பகுதியில் மாத்தறையில் மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் ஒரு சில வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக செய்ய முடிந்த போதிலும், இன்னும் பல விடயங்களைச் நாட்டிற்காக செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயினும், இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கின்ற, சமூக அடையாளங்கள், கலாசாரங்களை சகித்துக்கொள்ளும், ஒருவருக்கொருவர் வெறுப்பின்றி இணைபவர்களை ஒன்றிணைத்து, நாட்டில் சரியான வளர்ச்சி நோக்குநிலையை உருவாக்குவதற்கான, ஒரு புதிய அரசியல் அணுகுமுறை தேவைப்படுவதாகவும், அதற்காக இந்நாட்டிலுள்ள மக்கள், தாம் பிறப்பினால் பெற்ற சாதி, மதம், இனம், பாலினம் ஆகிய அடையாளங்கள் அனைத்தையும் தனது தலைக்குள் நிரப்பிக் கொள்ளாத அனைவருக்கும் தான் அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அரசியலிலிருந்து விலகியபோதிலும், தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக, தனக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவை வழங்கிய மாத்தறையிலுள்ள தைரியமான மக்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவராகவும் மாத்தறை மாவட்ட தலைவராகவும், அக்கட்சியின் வேட்பாளர் புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.
Comments are closed.