15 பைசாவிற்கு குளிர்பானம் கொடுத்த ரஸ்னா நிறுவனர் காலமானார்!
ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் அந்த பொருளுக்கான பெயர் என்பது போலவே மாறிவிடும். அதன் காரணம் அந்த பொருள் அடிமட்ட மக்கள் வரையிலும் குறைந்த விலையில் சென்று சேர்ந்திருக்கும். அது போன்ற ஒரு பொருள் தான் ரஸ்னா. விருந்தினர் வந்தாலோ, வீட்டில் விஷேஷம் என்றாலோ முதலில் குடிக்க என்ன கொடுப்பது என்று யோசித்ததும் ரஸ்னா தான் நினைவுக்கு வரும்.
சுவையிலும் விலையிலும் எல்லா மக்களையும் திருப்தி படுத்துவதாக ரஸ்னா இருந்தது, இப்போதும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு பொருளை சமூகத்திற்கு வழங்கிய ரஸ்னா நிறுவனர் மற்றும் தலைவரான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா(Areez Pirojshaw Khambatta), சனிக்கிழமை காலமானதாக நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் மற்றும் வணிகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய 85 வயதான கம்பட்டா, அரீஸ் கம்பட்டா பெனிவலண்ட் டிரஸ்ட் மற்றும் ரஸ்னா அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தார். அவர் WAPIZ இன் (பார்சி இரானி ஜர்தோஸ்டிஸின் உலகக் கூட்டணி) முன்னாள் தலைவராகவும், அகமதாபாத் பார்சி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராகவும், இந்தியாவின் பார்சி ஜோராஸ்ட்ரியன் அஞ்சுமான்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அஹமதாபாத் இல்லத்தில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு தனது 85 வது வயதில் இவ்வுலகை நீத்தார்.
1970 களில் அதிக விலையில் விற்கப்படும் குளிர்பானப் பொருட்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் குளிர்பானப் பொதிகளை ரஸ்னா நிறுவனம் உருவாக்கியது. நாட்டில் 1.8 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் ரஸ்னா, இப்போது உலகின் மிகப்பெரிய குளிர்பானம் செறிவூட்டப்பட்ட உற்பத்தியாளராக விளங்குகிறது.
ரஸ்னா நிறுவனம் உலக அளவில் சுமார் 60 நாடுகளில் விற்கப்படுகிறது மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் (MNCs) ஆதிக்கம் செலுத்தும் பானங்களின் பிரிவில் எப்போதும் சந்தையில் முன்னணியில் உள்ளது.
₹ 5 மதிப்புடைய ஒரு ரஸ்னாவை 32 கிளாஸ் குளிர்பானங்களாக மாற்றலாம். இதனால் கிளாஸ் ஒன்றுக்கு வெறும் 15 பைசா மட்டுமே செலவாகும். மேலும் பிராண்டின் “ஐ லவ் யூ ரஸ்னா” பிரச்சாரம் 80கள் மற்றும் 90களில் வளர்ந்தவர்களின் மனதில் இன்னும் பசுமையாக இருக்கும்.
பிரோஜ்ஷாவின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த அறக்கட்டளை நிறுவனம் சார்பில் கல்வி மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்ட பணிகளையும் நடத்தி வருவதாக தெரிகிறது.