வாக்களிப்பில் பங்கேற்காதோர் ‘பட்ஜட்’டுக்கு எதிர்ப்பு அல்ல! – ரணில் விளக்கம்.
“வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள் வரவு – செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பு என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. தவறிழைத்தோர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம் உண்டு.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2023 ‘பட்ஜட்’ இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம் தொடர்பில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எந்தச் சதி முயற்சியாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது. இதனை வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.
நாடு மீதும் மக்கள் மீதும் அக்கறையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்தே தீர வேண்டும்.
எமது நாடு மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சுயநல அரசியல் எண்ணம் கொண்டவர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
அதேவேளை, வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவர்கள் எதிர்ப்பு என்று எவரும் அர்த்தம் கொள்ளக்கூடாது. தவறிழைத்தோர் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தீர்க்கமான முடிவெடுக்கச் சந்தர்ப்பம் உண்டு” – என்றார்.
‘பட்ஜட்’ இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 19 எம்.பிக்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.