இ.போ.ச. யாழ். சாலைப் பணியாளர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு – பயணிகள் பெரும் அவதி.
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் சாலை பணியாளர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்., வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்த விபத்து சம்பவத்தின் போது , இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதி மீது அங்கிருந்த சிலர் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அதில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய தாக்குதலாளிகளையும் பொலிஸார் கைது செய்ய வேண்டும் எனவும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரியே இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தினுள் பஸ்களை நுழைய விடாது தடுப்புக்களை அவர்கள் போட்டுள்ளனர். அதனால் வெளி மாவட்ட பஸ்கள், பஸ் நிலையத்தினுள் நுழைய முடியாததால் , வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, திடீரென இன்று அவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் , தூர இடங்களுக்கு வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் எனப் பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.