மங்களூர் வெடிகுண்டு.. நாகர்கோவில் விடுதிகளை சல்லடைபோடும் போலீசார்!
மங்களூரு குக்கர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக், நாகர்கோவிலில் தங்கியிருந்தது தெரியவந்ததால், அங்குள்ள விடுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடக மாநிலம், மங்களூருவில் கடந்த 19-ம் தேதி குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார் இதையடுத்து, என்.ஐ.ஏ. மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். ஷாரிக்கின் செல்போன் மற்றும் டைரி போன்றவற்றை கைப்பற்றி ஆய்வு செய்ததில், தமிழ்நாட்டில் கோவை, மதுரை, நாகர்கோவில் சென்று வந்தது தெரியவந்தது. இந்நிலையில், மங்களூருவில் இருந்து வந்த கர்நாடக போலீசார், நாகர்கோவிலில் நேற்று விசாரணை நடத்தினர்.
மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிரேம் ராஜ் என்ற பெயரில் போலி ஆவணங்களை கொடுத்து, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நாகர்கோவிலில் ஷாரிக் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் பயணம் மேற்கொண்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட போலீசார், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விசாரணை நடத்தி, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், நாகர்கோவிலில் ஷாரிக் தங்கியிருந்த 5 நாட்களில் யார் யாரை சந்தித்தார், எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.