இந்தியாவில் எந்த மாநில மக்கள் அதிகமாக மதுப்பழக்கம் உள்ளவர்கள் தெரியுமா?
தொடர்ச்சியான மதுப்பழக்கம் உள்ளவர்கள் யார் என்கிற ஆய்வில், நாட்டின் சராசரியை தெலங்கானா குடிமகன்கள் மிஞ்சியுள்ளார்கள் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் சமூகநீதி அமைச்சகம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. நாடு முழுவதும் 18 வயது முதல் 75 வயது வரை உள்ள ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு மூலம் நாடு முழுவதும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், தொடர்ச்சியான மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை பேர், எந்த மாநிலத்தில் அதிகப்பட்சமான மதுப்பிரியர்கள் இருக்கிறார்கள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆய்வு முடிவில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆய்வு முடிவின் படி தெலங்கானா மாநில மக்கள் கிட்டத்தட்ட 19 விழுக்காடு மக்கள் மதுப்பிரியர்கள். அதாவது தெலங்கானா மாநிலத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை 50 லட்சத்து 40 ஆயிரம் பேர். அண்டை மாநிலமான ஆந்திராவில் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை 65 லட்சமாக உள்ளது. அதே போல் தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் தெலங்கானா மக்கள் தேசிய சராசரியை மிஞ்சியுள்ளார்கள். அதாவது தெலங்கானாவில் மதுப்பழக்கம் உள்ளவர்களில் 17 விழுக்காடு மதுப்பிரியர்கள் தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் கிட்டத்தட்ட 22 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்கள் என்பதும், 15 கோடிப் பேர் தொடர் மதுப்பழக்கம் கொண்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதே போல் மாநில வாரியாக மதுப்பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அந்தந்த மாநில மக்கள் தொகை அடிப்படையில் சத்தீஷ்கரில் 43.5 விழுக்காடும், உத்தரப்பிரதேசத்தில் 29.5 விழுக்காடும், பஞ்சாபில் 25.2, டெல்லியில் 25, உத்தரகண்ட் மாநிலத்தில் 23.2 கோவாவில் 28 விழுக்காடு மதுப்பிரியர்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மதுப்பழக்கம் உள்ளவர்களின் சராசரியில் பீகார் ஆச்சரியத்தை ஏற்படுத்திள்ளது. அதாவது பீகார் மக்கள் தொகையில் வெறும் ஒரு விழுக்காடு மக்களே மதுப்பழக்கம் உள்ளவர்கள். தமிழ்நாட்டு மக்கள் தெகையில் 15.5 விழுக்காடு மதுப்பழக்கம் உள்ளவர்கள்.
தேசிய குடும்பநல அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் வேறு சில சுவாரஸ்யமான தகவல்களும் கிடைத்துள்ளன. அதாவது, தனிப்பட்ட முறையில் அதிக அளவு மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் பட்டியலில் தெலங்கான முதலிடத்தில் இருக்கிறது. அதோடு நீண்ட கால மதுப்பழக்கம் (அதாவது குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்) உடையவர்கள் அதிகம் உள்ள மாநிலத்திலும் தெலங்கானா தான் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது தெலங்கானாவில் மதுப்பழக்கம் உள்ளவர்களில் 43.3 விழுக்காடு மதுப்பிரியர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேல் மதுப்பழக்கம் உடையவர்களாம். இந்த பட்டியலில் 41 விழுக்காடுடன் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.