அரசியலில் இருந்து இனி ஒதுங்கவேண்டும் மஹிந்த – ‘மொட்டு’க்குள் வலுக்கின்றது எதிர்ப்பு.
ஸ்ரீலங்கா பெரமுன கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளிவரும் நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து அந்தக் கட்சிக்குள் இருந்து எழ ஆரம்பித்திருக்கின்றது. ராஜபக்ச குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இதற்குக் காரணம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான மக்கள் எதிர்ப்பால் ராஜபக்சவினர் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமவிங்கவால் நியமிக்கப்பட்டபோதும், அது இன்னமும் முழுமை பெறவில்லை. அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருக்கும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல்களைக் காதில் போட்டுக் கொள்ளாது செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னணியில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உள்ளார் என்றும் பேசப்படுகின்றது. தனது சகோதரர்களின் கடந்தகாலச் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியுற்றுள்ள மஹிந்த ராஜபக்ச இப்போது அனைத்து விடயங்களிலும் கடும்பிடியில் இருக்கின்றார் என்று கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ச இனி அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. இதற்கு முன்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,
“மஹிந்த இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய சேவை அனைத்தையும் செய்துவிட்டார். மஹிந்தவின் தலைமைத்துவம் இல்லை என்றால் இப்போதும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்.
அவர் 80 வயதை நெருங்குகின்றார். அவர் ஓய்வெடுப்பது நல்லது. யாரும் அவரை அவர்களின் அரசியல் தேவைக்காக ப் பயன்படுத்தினால் அதற்கு நான் இணங்கமாட்டேன்.
நெல்சன் மண்டேலாவின் மரணத்தின்போது உலகத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்படியொரு கௌரவம் மஹிந்தவுக்குக் கிடைக்க வேண்டும்” – என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, முன்னாள் நிதி அமைச்சரும்மஹிந்த ராஜபக்சவின் சகோதருமான பஸில் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படுகின்றது என்று கூறப்படுகின்றது.