கலைவாணி என்ற இயற்பெயருடன் திரை இசை உலகிற்கு வந்தவர்,
அவருக்குள்ளேயே இசை கலை இருந்ததாலோ என்னவோ பெயரில் இன்னொரு கலை வேண்டாம் என்று நினைத்து வாணியாக இசை குடும்பத்தில் இருந்து வந்த தமது கணவர் ஜெயராம் அவர்களை மணம் புரிந்து வாணி ஜெயராமாக பம்பாய்க்கு வங்கி பணி மாறுதல் பெற்று சென்றார்.
அங்கு தன் இசை பயணத்தை தொடங்கியவர் சென்னையில் நடைபெற்ற ஒரு கச்சேரிக்காக தான் பாடிய ஹிந்தி பாடல்களின் தொகுப்பை பாடி பயிற்சி எடுத்து கொண்டிருந்த சமயம், அதை கவனித்த இசை மேதை எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் அழைப்பின் பேரில் முதன் முதலாக தமிழ் திரை இசை உலகில் தாயும் சேயும் என்ற படத்திற்காக பாடல் பாடினார்.
ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. முதல் படம் வெளிவராத சூழலில் அதே இசை நிகழ்வை கவனித்து மலையாளத்தில் 1973ல் வெளியான சொப்னம் என்ற படத்திற்கு இசை அமைத்த இசை மேதை திரு.சலீல் சவுத்ரி அவர்கள் வாயிலாக “நின்னை ஞான் நென்றோ விளித்து (சவ்ர்யோவிதத்தில் விதர்னொரு” பாடலை பாடி அப்பாடல் பயங்கர ஹிட்டடித்தது.
தொடர்ந்து சங்கர் கணேஷ் இசையில் 1973ல் வீட்டுக்கு வந்த மருமகள் படத்திற்காக முதன் முறையாக தமிழில் ஜோடி பாடலாக டி.எம்.எஸ் அவர்களுடன் “ஓரிடம் உன்னிடம்” என்ற பாடல் பாடினார். பின் முதன்முதலாக மெல்லிசை மன்னரின் இசையில் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திற்காக “மலர் போல் சிரிப்பது” பாடல் பாடி இருந்தாலும், 1974ல் தீர்க்க சுமங்கலி படத்திற்காக இவர் பாடிய “மல்லிகை என் மன்னன் மயக்கும்” பாடல் மந்தைவெளி மயிலாப்பூர்களை தாண்டி மலேசியா என உலக நாடுகளில் இருக்கும் இசை ரசிகர்களை வானொலி மூலமாக சென்று அடைந்தது இவரது புகழையும் சேர்த்து.
பிறகு அதே 1974ஆம் வருடம் விஜயபாஸ்கர் அவர்களின் இசையில் வந்த எங்கம்மா சபதம் படத்திற்காக “அன்பு மேகமே இங்கு ஓடி வா” பாடலை சோலோவாகவும், பின் பாடும் நிலாவுடன் டூயட்டாகவும் பாடி அதிரி புதிரி ஹிட்டடித்தது தமிழ் திரை இசை கண்ட சம்பவமானது.
1975ஆம் வருடம் அபூர்வ ராகங்கள் படத்தில் இவர் “கேள்வியின் நாயகனே” என சசிரேகாவுடனும் “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை” என தனியே பாடியதுடன், ஏழு ஸ்வரஙகளில் பாடலுக்காக முதன் முறையாக தேசிய விருதை பெற்றார். அன்று தொடங்கிய இவரது இசை பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, மார்வாரி, பெங்காலி, ஆங்கிலம் என 19 மொழிகளில் பாடப்பட்டு அந்தந்த மொழி மக்களை தமது குரலால் பரவசபடுத்தினார்.
1977ஆம் ஆண்டு வெளியான புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வரும் “பூந்தென்றலே நல்ல நேரம்” பாடலே பாடகர் ஜெயச்சந்திரனுடன் இணைந்து இசைஞானியின் இசையில் வாணிமா பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடதக்கது. 1979ல் வெளிவந்த அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் வரும் “நானே நானா யாரோ தானா” பாடல் மூலம் தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகி விருதை பெற்றார்.
முள்ளும் மலரும் படத்தில் இவர் பாடிய “நித்தம் நித்தம் நெல்லு சோறு” பாடல் இசைஞானியின் இசையில் மோர்சிங், கடம் என வெறும் இரண்டே இரண்டு இசை உபகரணங்களை கொண்டு இசை அமைக்கபட்டது என்பது பெருமைக்குரியது. மல்லிகை என் மன்னன் பாடல் கொடுத்த பெருமையையும் புகழையும் போல இசைஞானி இசையில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இவர் பாடிய “என்னுள்ளில் எங்கோ ஏங்கும்” பாடல் அனைத்து தமிழ் திரையிசை ரசிகர்களாலும் போற்றி கொண்டாடப்பட்டது.
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன் பாடலை பற்றி மட்டும் ஒரு தனி பதிவே போடலாம்.. இசைஞானியின் இசை ஒரு புறம் அதகள படுத்த… வாணியம்மா தன் குரலால் அந்த பாடலை அடிபொலியாக்கி இருப்பார். நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா பாடல் அன்றைய இசை ரசிகைகளின் இன்ப கேளிக்கை கொண்டாட்ட பாடலாக வலம் வந்தது குறிப்பிடதக்கது.
இசைஞானியின் இசையில் வாணிமா பாடிய சில பாடல்களின் தொகுப்பு:
ஒரே நாள் உனை நான் நிலாவில்
மான் கண்டேன் மான் கண்டேன்
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
ஆள அசத்தும் மல்லியே மல்லியே
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ
சுக ராகமே சுக போகமே
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது
ஏபிசி நீ வாசி எல்லாம் உன்
பூவான ஏட்ட தொட்டு பொன்னான
“எனக்கு ஒரு 13 வயசு இருக்கும் போது எங்க நண்பர்கள் எல்லாம் இணைந்து ஒரு மியூசிக் பேண்ட் தொடங்கினோம்.. அப்ப அந்த நிகழ்வுக்கு வாணிம்மாவை தான் அழைத்து வந்து குத்து விளக்கு ஏற்ற வைத்தோம். அவுங்க குரலை என் இசையில் அதிகமாக பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் இன்றும் என்னுள் இருக்கிறது.” வாணியம்மாவுக்கு பிலிம்பேர் வாழ் நாள் சாதனையாளர் விருதை ரஹ்மான் கொடுக்கும் நிகழ்வில் கூறியது.
சங்கீதம் என்பது சினிமா என்பதை தாண்டி லலித சங்கீதம், சாஸ்திரீய சங்கீதம், உப சாஸ்திரீய சங்கீதம், நாட்டுபுற சங்கீதம் என அனைத்து இசையின் தளங்களிலும் தனக்கென தனி பாணியை உருவாக்கி இன்று வரை அனைத்து இசை ரசிகர்களின் மனதிலும் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதியாய் திகழ்ந்து விளங்கும் வாணியம்மா.