வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு புகார்.. துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற காங்கிரஸ் வேட்பாளர்!
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியான பாஜக மீண்டும் அமோக வெற்றி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தல் வரை பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மட்டுமே நேரடி போட்டி இருந்த நிலையில், இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் முழுவீச்சில் களமிறங்கியதால் குஜராத் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது.
இருப்பினும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் குஜராத் தேர்தலில் பாஜக EVM வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டி, காங்கிரஸ் வேட்பாளர் துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
காந்திகாம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான பாரத்பாய் சோலங்கி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மல்தி கிஷோர் மகேஸ்வரியிடம் ஆரம்பம் முதலே பின்னடைவை கண்டுவந்தார். ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் சுமார் 12,000 வாக்குகள் முன்னிலை பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பாரத்பாய் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். வாக்கு எண்ணும் இயந்திரங்களை சரியாக சீல் செய்யவில்லை.
இந்த இயந்திரங்களில் மோசடி செய்து வாக்குகள் எண்ணப்படுகின்றன என்று கூறி துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்று பரபரப்பை கிளப்பினார். இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் காங்கிரஸ் வேட்பாளரின் செயலை தடுத்தி நிறுத்தி அவரை ஆசுவாசப்படுத்தினர். தான் தொடர்ந்து புகார் அளித்தும் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேட்பாளர் சோலங்கி அதிருப்தியில் புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் அந்த வாக்கு எண்ணிக்கை மையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.