’19’ இற்கு சமாதி கட்டப்பட்டால் இலங்கை ராஜபக்ச யுகம்தான் – ரணில் எச்சரிக்கை
“அரசமைப்பின் 19ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட்டால் இலங்கை ராஜபக்ச யுகமாகவே மாறும். இந்தக் கொடூர நிலைமைக்கு நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் எவரும் ஆதரவு வழங்கக்கூடாது.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கலாம். ஆனால், அவர்கள் குடும்ப ஆட்சியையும், சர்வாதிகார ஆட்சியையும் ஒருபோதும் விரும்பவில்லை.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கவே நாட்டு மக்கள் தமக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்று ராஜபக்சவினர் பொய்யுரைக்கின்றனர். இதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியமில்லை.
19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க ஆதரவு வழங்கினால் அது ராஜபக்சக்களின் மன்னர் ஆட்சிக்கே வழிவகுக்கும். எனவே, இதை உணர்ந்து மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்” – என்றார்.