112 பைகளில் 1 ரூபாய் நாணயங்கள்… 2 லட்சத்து 85 ஆயிரத்தை குவித்து ஷோருமை திணறடித்த பைக் பிரியர்..!
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 112 பைகளில் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே சில்லரையாகக் கொண்டு வந்து தனக்கு பிடித்த ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் மஞ்சரியால் மாவட்டத்தின் தாரகர்மா காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான இவருக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்க வேண்டும் என்பது நீண்ட கால விருப்பமாக இருந்துள்ளது.
தனது ஆசை பைக்கை என்றாவது ஓட்டித்தான் தீர வேண்டும் என கனவில், சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப தனது வீட்டில் ஒரு ஒரு ரூபாயாக உண்டியல் பணம் சேர்க்க ஆரம்பித்துள்ளார். அப்படி சேகரித்து சேகரித்து ஒரு நாள் முழு பணத்துடன் பைக் ஷோரூமுக்குள் நுழைந்துள்ளார் வெங்கடேஷ். இவரின் என்ட்ரியை பார்த்து ஷோரூமில் இருந்த ஊழியர்கள் அனைவரும் மிரண்டு போனார்கள் என்றே சொல்லாலம்.
காரணம் வண்டியின் மதிப்பான ரூ.2.85 தொகை அனைத்தையும் ஒரு ரூபாய் சில்லரைகளாக மொத்தம் 112 பைகளில் கொண்டு வந்துள்ளார். முதலில் இது போன்று சில்லரையை பேமென்டாக வாங்க முடியாது என ஷோரூம் ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
பின்னர் இளைஞர் வெங்கடேஷ் இது என் கனவு என்று கூறி அவர்கள் சமாதானம் செய்துள்ளார். இந்த சில்லரையை எண்ணி முடிக்க இவர்களுக்கு அரை நாள் ஆனது. ஒரு வழியாக அனைத்து பணத்தையும் எண்ணி முடித்தப் பின் பேமென்டை உறுதி செய்த ஷோரூம் ஊழியர்கள் பில்லை போட்டு, பைக் பிரியர் வெங்கடேஷிடம் சாவியை தந்துள்ளனர். அதை பூரிப்புடன் பெற்றுக்கொண்ட வெங்கடேஷ் ஷோரூம் ஊழியர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அவர்களும் வெங்கடேஷின் இந்த அலாதி பைக் மோகத்தை பார்த்து பாராட்டினர்.