5 ஆண்டுகளில் 35,493 பெண்கள் வரதட்சனை கொடுமையால் மரணம் – மத்திய அரசு தகவல்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வரதட்சணை கொடுமை தொடர்பாக விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
அதன்படி, நாட்டில் 2017 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமான மரணங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 11,874 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக பீகாரில் 5,354 மரணங்களும், மத்தியப் பிரதேசத்தில் 2,859 மரணங்களும் வரதட்சணை கொடுமை காரணமாக நிகழ்ந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் 2,389, ராஜஸ்தானில் 2,244 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.தென் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 198, கேரளா 52, கர்நாடகா 934 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆண்டுவாரியாகப் பார்க்கையில், 2017ஆம் ஆண்டில் 7,466, 2018இல் 7,167, 2019இல் 7,141 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன.2020இல் 6,966 மற்றும் 2021இல் 6,753 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அமைச்சர் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் சராசரியாக நாள்தோறும் 20 வரதட்சணை மரணங்கள் பதிவாகின்றன.