முதன்முறையாக தாஜ்மஹாலுக்கு வரி கேட்டு நோட்டீஸ்… சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை
குடிநீர் வரி மற்றும் சொத்து வரி செலுத்த கோரி தாஜ்மகாலுக்கு, ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்தக் கோரி தாஜ்மகாலுக்கு ஆக்ரா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சொத்து வரியும், ஒரு கோடி ரூபாய் குடிநீர் வரியும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 15 நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் தாஜ்மகாலுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாஜ்மகாலுக்கு முதல் முறையாக சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவறுதலாக அனுப்பப்பட்டு இருக்கலாம் எனவும், இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் தெரிவித்தார்.