உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட அரசு கடும் பிரயத்தனம்! – சு.க. எம்.பி. அங்கஜன் குற்றச்சாட்டு.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தும் நிலைப்பாட்டில் அரசு இல்லை. அந்தத் தேர்தலைப் பிற்போடுவதற்குரிய வழிமுறைகளையே அரசு மேற்கொள்கின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சாட்டினார்.
யாழ். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வலைப்பந்தாட்ட மைதானத்தைத் திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்குக் காலம் இருக்கின்றபடியால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு வேண்டுகோளை நாங்கள் முன்வைக்க முடியாது. ஏனெனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் யாப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துப் பெரும்பான்மையூடாக அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரது ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் இரண்டரை வருடங்கள் உள்ளன. அந்தக் காலம் முடிந்த பின்னர்தான் தேர்தல் வைக்க வேண்டும் என்பது சட்ட ரீதியாக இருக்கின்றது.
கால எல்லை முடிந்த பின்னர்தான் தேர்தல் வைக்க முடியும் என்று சட்டம் சொல்கின்றது.
அந்தக் கால எல்லை கடந்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. இது ஜனநாயக நாடு. எனவே, மக்களுடைய அபிப்பிராயங்களுக்குச் செவிசாய்த்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.
உள்ளூராட்சி சாய்த்த தேர்தலை விரைவில் நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசை வற்புறுத்த வேண்டும்” – என்றார்.