கொரோனா பயம்! 3 ஆண்டுகள் வீட்டு அறையை விட்டு வெளிய வராத பெண்கள்..போலீஸ் உதவியுடன் மீட்பு
2020ஆம் ஆண்டு மார்ச் இந்தியாவில் கோவிட் பரவல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது பயத்தில் வீட்டிற்குள் சென்ற அடைந்து கொண்ட இரு பெண்கள் சுமார் மூன்று ஆண்டுகளாக வெளியே தலை காட்டமால் தனிமையிலேயே இருந்துள்ளனர். கேட்க படையப்பா நீலாம்பரி கதை போல தோன்றினாலும் இந்த உண்மை சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தின் காகிநாடா மாவட்டத்தில் உள்ள குய்யேறு கிராமத்தை சேர்ந்த 44 வயதான மணி என்ற பெண்ணும் அவரது மகள் துர்கா பவானி கொரோனா வைரஸ்சுக்கு பயந்து 2020ஆம் ஆண்டில் இருந்து வீட்டின் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை.
முதல் லாக்டவுன் காலத்தில் சில வாரங்கள் நாட்டின் அனைத்து மக்களும் அவ்வாறு தான் இருந்தார்கள் என்ற போதிலும், பின்னர் முககவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளால் மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். ஆனால், தாய் மணியும் அவரது மகள் துர்காவும் பீதி காரணமாக வீட்டின் அறையை விட்டு வெளியே வராமல் சுமார் 3 ஆண்டுகள் அடைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
சூரிய வெளிச்சத்தை பார்க்காமல், உறவினர் யாரையும் சந்திக்காமல் இருந்த மணியை அவரது கணவர் சுரி பாபு எத்தனையோ முறை சமாதானம் செய்து வெளியே கொண்டு வர முயற்சித்துள்ளார். ஆனால், மணியும் அவரது மகளும் கத்தி கூச்சலிட்டு கணவரையும் வெளியே அனுப்பியுள்ளனர். கடந்த ஒரு வாரமாக கணவரை கூட அருகே வர விடாமல் மணியும் அவரது மகளும் விரட்டி அடித்துள்ளனர்.
இதனால், வேறு வழி தெரியாமல் விவகாரத்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய் கிழமை காவல்துறையினர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பல மணிநேரம் பேசி, இரு பெண்களையும் மீட்டு காகிநாடா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர் ஹேமலதா, இருவரும் உடல் ரீதியாக திடமாக உள்ளதாக கூறினார். இருப்பினும் அவர்களின் மனநலனை பரிசோதிக்க இருவரும் மனநல மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.