ரூ.500 கோடி வசூல்.. துபாயில் எண்ணெய் கிணறு.. சென்னையை அதிர வைத்த மோசடி.. பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்!
ரூ.500 கோடி வரை ஏமாற்றிய ஹிஜாவு நிதி நிறுவன உரிமையாளர்களை கைது செய்யக் கோரி சென்னையில் கொட்டும் மழையில் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையை தலைமை இடமாக கொண்டு ஹிஜாவு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் மாதம் ரூ. 15 ஆயிரம் வட்டி என கூறி பொதுமக்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான புகார்களின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹிஜாவு நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது, 4500 முதலீட்டாளர்களிடம் சுமார் 500 கோடி வரை ஏமாற்றிய அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. ஹிஜாவு நிறுவனத்தின் இடைத்தரகர்களான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் நேரு ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். உரிமையாளர்களான சௌந்தரராஜன் மற்றும் அவரது மகன் அலெக்சாண்டரை தேடி வருகின்றனர்.
போலீசாரின் தொடர் விசரணையில் எஸ்.ஜி அக்ரோ ப்ரொடக்ட்ஸ், அருவி அக்ரோ ப்ரொடக்ட்ஸ், சாய் லட்சுமி என்டர்பிரைசஸ், ராம் அக்ரோ ப்ரொடக்ட்ஸ், எம்.ஆர்.கே பிரதர்ஸ் ஆகிய கிளை நிறுவனங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் மோசடி செய்துள்ளதும், அந்த பணத்தைக் கொண்டு மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளில் எண்ணெய் கிணறுகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இதனால், முதலீட்டார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அதனால் ஏமாற்றப்பட்ட தொகையும் அதிகரிக்கலாம் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பாக கொட்டும் மழையிலும் ஒன்று கூடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சௌந்தரராஜன், அலெக்ஸாண்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இழந்த தங்களது பணத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதே பாணியில் ஆருத்ரா நிதி நிறுவனம், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம், எல்பின்-ஈ-காம் நிதி நிறுவனம் ஆகியவை சுமார் 2 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.12,000 கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவத்திலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இடைத்தரகர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.