தம்பதி கொலையில் திடுக் திருப்பம்.. போலீசாருக்கே ஷாக் கொடுத்த 12வயது சிறுவன்!
வயதான தம்பதியை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளையடியத்த வழக்கில் மூளையாக செயல்பட்ட 12 வயது சிறுவனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் காசியாபாத்தை சேர்ந்த 60 வயதான இப்ராகிம். குப்பைகளை வியாபாரம் செய்யும் தொழில் நடத்தி வந்தார். இந்த நிலையில் இப்ராகிமும் அவரது மனைவி ஹசாராவும் கடந்த மாதம் 22ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். இந்த வழக்கில் கொலைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான 12 வயது சிறுவனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சிறுவனுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், குப்பைகள் விற்றதன் மூலம் இப்ராஹிம் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்ததை அறிந்து அவர்கள் கொள்ளையடிக்கவே முயன்றதாகவும், ஆனால் கொள்ளை முயற்சி கொலையில் முடிந்துவிட்டதாகவும் போலீசாரிடம் அச்சிறுவன் கூறியுள்ளார்.
சிறுவனோடு மஞ்சேஷ், சிவம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரான சந்தீப் என்பவரை தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 12 ஆயிரம் ரொக்கம், செல்போன், தங்க நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.