புல்டோசர் தண்டனை.. காதலியை கொடூரமாக தாக்கிய வாலிபரின் வீட்டை தரைமட்டமாக்கிய அரசு!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ இரண்டு நாள்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வைரலானது. வைரலான வீடியோவில் இருந்த இருவரும் காதலர்கள் என்றும் அந்த வாலிபரிடம் காதலி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதும் அவர்கள் பேசுவதில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

காதலியின் திருமணக் கோரிக்கையை அந்த இளைஞர் ஏற்க மறுத்த நிலையில், தொடர்ந்து அந்த பெண் வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பெண்ணை வேகமாக அடிக்கத் தொடங்கினார். நிலை தடுமாறி பெண் கீழே விழுந்து நிலையில், அந்த பெண்ணை காலால் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கினார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அதேவேளை, அந்த இளைஞரை யாரும் தடுத்து தட்டி கேட்கவில்லை.

வீடியோ வைரலானதை அடுத்து மத்தியப் பிரதேச காவல்துறை தாமாக முன்வந்து அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டது. காவல் துறை விசாரணயில் தாக்குதல் நடத்தியது பங்கஜ் திரிபாதி என்ற 24 வயது இளைஞர் என்றும் இவர் டிரைவர் வேலை செய்பவர் என்று தெரியவந்தது. சம்பவத்திற்குப் பின் இவர் ஊரில் இருந்து தப்பித்து உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் தலைமறைவனார்.

பங்கஜ்ஜின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறை சனிக்கிழமை அன்று அவரை கைது செய்தது. தொடர்ந்து அரசின் உத்தரவின் பேரில் ரேவாவில் உள்ள பங்கஜ்ஜின் வீட்டை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தினர் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கினர். இந்த புல்டோசர் தண்டனை தொடர்பாக மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் ட்விட் செய்துள்ளார்.

அவர் தனது பதிவில், “பெண்களுக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தில் யார் குற்றம் செய்தாலும் அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. குற்றவாளியின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது” என்றுள்ளார். குற்ற சம்பவங்களுக்கு இந்த புல்டோசர் தண்டனையை உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு முதலில் பிரபலமாக்கியது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் இதை பின்பற்றத் தொடங்கியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.