”சுங்கச்சாவடிகள் 6 மாதங்களில் அகற்றப்படும்.. இனி கேமரா மூலம் கட்டணம்” – மத்திய இணை அமைச்சர்
நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் 6 மாதங்களில் அகற்றப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய சாலை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த கூட்டத்தில் திட்ட பணிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் ஆலோசனை செய்யப்பட்டது என்றும் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் சுங்கச்சாவடிகள் குறைக்கப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாடு முழுவதும் 6 மாதங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என கூறினார். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகன எண்களை பதிவு செய்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வி.கே.சிங் தெரிவித்தார்.