என் மனைவி இப்படிதான் இருக்க வேண்டும்… மனம் திறந்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நாடு தழுவிய பாரத் ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் தனது பர்சனல் விஷயங்கள் குறித்து கொஞ்சம் மனம்திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்வின் அன்பு அவர். எனது இரண்டாம் தாய்” என்று கூறினார். அப்போது அவரிடம் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.”எப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் சேர்வீர்கள் ?” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு 52 வயதான ராகுல் காந்தி , “இது ஒரு சுவாரசியமான கேள்வி. நான் ஒரு பெண்ணையே விரும்புவேன். அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த பெண் என் அம்மா மற்றும் என் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது” என பதில் அளித்தார்.
எனக்கு கார் சரி செய்ய தெரிந்தாலும் அதை ஓட்ட அவ்வளவு விருப்பம் இல்லை. என்னிடம் என் அம்மாவின் கார் ஒன்று தான் உள்ளது. காரை விட மோட்டார் பைக் ஓட்டுவது தான் எனக்கு பிடிக்கும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டியுள்ளேன். ஆனால் எலக்ட்ரிக் பைக் ஒட்டியதில்லை. ஒரு நாள் முயற்சிக்க வேண்டும் என்றார். மின்சார வாகனங்களின் உற்பத்தியில் நாடு இன்னும் தனது திறனை மேம்படுத்த வேண்டும். EV புரட்சிக்கு ஒரு அடித்தளம் தேவை. நாம் அதில் பின்தங்கி இருக்கிறோம். பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான அடித்தளம் இங்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது எதிர்ப்பாளர்கள் அவரை ‘பப்பு’ போன்ற வேறு பெயர்கள் கொண்டு அழைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, “நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும், அதுபற்றி கவலை இல்லை. நான் யாரையும் வெறுக்க மாட்டேன்.
நீங்கள் என்னை தவறாக நடத்தலாம், ஏன் என்னை அடிக்கவும் செய்யலாம். நான் உங்களை வெறுக்க மாட்டேன். என்னை பப்பு என்று அழைக்கிறார்கள் என்றால் அது ஒரு பிரச்சாரம். அவர்கள் தங்களுக்குள் இருக்கிற பயத்தால் அப்படி சொல்கிறார்கள். நீங்கள் எனக்கு இன்னும் பல பெயர்களை வைக்கலாம். நான் கவலைப்படவில்லை. நான் நிம்மதியாகவே இருக்கிறேன்” என பதில் அளித்தார்.