சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
2023ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை ஜனவரி 09 ஆம் தேதி அன்று சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் ஓ.பி.எஸ், “2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை தமிழ்நாடு மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். என்னுடைய வேண்டுகோள் முழுமையாக ஏற்கப்படவில்லையென்றாலும், விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதேசமயத்தில் இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு என்பது அனைத்து அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு சர்க்கரை அட்டை வைத்திருப்போரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அரிசி கார்டு கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு கைப்பேசி மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான அரிசி கார்டு இன்னமும் வழங்கப்படவில்லை. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகுப்பு தங்களுக்கு கிடைக்காதோ என்று ஐயம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. 2022-2023-ம் ஆண்டுக்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான கொள்கை விளக்க குறிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்த சர்க்கரை அட்டைதாரர்களின் எண்ணிக்கை 3,83,756. மொத்தமுள்ள 02,21,31,032 குடும்ப அட்டைகளில் சர்க்கரை அட்டைதாரர்களின் எண்ணிக்கை வெறும் 1.7 சதவிகிதம்தான். இது தவிர அரிசி குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து கார்டு கிடைக்காதோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சம். ஆகமொத்தம் கிட்டத்தட்ட 4,83,756 குடும்பங்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த தருணத்தில் சர்க்கரை கார்டு மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரிசி கார்டு கிடைக்காத நான்கே முக்கால் லட்சம் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினால் அவர்களும் மிகுந்த மனநிறையுடன் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இதனால் அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமையும் ஏற்படாது. இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சியடைவர். எனவே முதலமைச்சர், சர்க்கரை அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி அட்டைக்கு விண்ணப்பித்து ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான கார்டு கிடைக்கப்பெறாதவருக்கும் 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகை வழங்க உடனடியாக உரிய உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.