ரிஷப் பண்ட் கார் விபத்துக்கு இதுதான் காரணமா? – காவல்துறை வெளியிட்ட தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது .
படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தீவிபத்தில் இருந்து தப்பியுள்ளார். கார் எரிந்து சாம்பலான நிலையில், படுகாயங்களுடன் சாலையில் கிடந்த ரிஷப் பண்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ரிஷப் பண்ட் பயணித்த கார் Mercedes Benz GL. அதிகாலை வேலையில் கார் ஓட்டும்போது தூக்க கலக்கத்தின் காரணமாக இந்த கார் விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் காவல்துறை டிஜிபி அசோக் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து டிஜிபி அசோக்குமார் கூறியதாவது, “கார் விபத்தானது ரூக்ரி பகுதி அருகே அதிகாலை 5.30 மணி அளவில் ஏற்பட்டது. ரிஷப் பண்ட் தனியாக கார் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது அவருக்கு தூக்கம் வந்த நிலையில், தூக்க கலக்தத்தில் காரை டிவைடரில் வேகமாக மோதியுள்ளார். இதில் கார் கடும் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. முதல்கட்டமாக ரூக்ரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக டேராடூன் மருத்துமனையில் ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றார்.
சிகிச்சையில் உள்ள ரிஷப் பண்ட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். ரிஷப் பண்ட் விரைவாக குணமடைய வேண்டி முன்னணி கிரிக்கெட் வீரர்களும், முக்கிய பிரபலங்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.